காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.

18 ஆடி 2025 வெள்ளி 13:38 | பார்வைகள் : 130
காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தி.மு.க., - எம்.பி., சிவாவால், அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வுக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
சென்னை பெரம்பூரில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் துணை பொதுச்செயலர் சிவா, 'காமராஜருக்கு 'ஏசி' இல்லையெனில், உடம்பில் அலர்ஜி வந்து விடும். அதற்காக, அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும், 'ஏசி' வசதி ஏற்படுத்த உத்தரவிட்டவர் கருணாநிதி.
'காமராஜர் உயிர் பிரியும் முன், கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு, 'நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்' என பேசினார்.
கண்டனம்
இது, தமிழகம் முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், சிவாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, 'தி.மு.க., பரப்பிய கட்டுக் கதைகளாலேயே தேர்தல் களத்தில் காமராஜர் வீழ்த்தப்பட்டார். இதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால், காமராஜரின் ஆன்மா நம்மை மன்னிக்காது' என்று கொந்தளித்துள்ளார்.
அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட சிவா, தன் பேச்சுக்கு ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்காமல், 'காமராஜர் மீது மிகுந்த மரியாதையும், பெரும் மதிப்பும் கொண்டவன் நான். எனவே, நான் பேசியதை விவாத பொருளாக்கிட வேண்டாம்' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள். காமராஜர் மறைந்த போது, ஒரு மகன் போல நின்று, இறுதி மரியாதை ஏற்பாடுகளை செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி.
'உடல் நலிவுற்ற நிலையிலும், என் திருமணத்துக்கு நேரில் வந்து, காமராஜர் வாழ்த்தியது, என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும் பேறு. அத்தகைய காமராஜர் குறித்து பொது வெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல' என்று கூறியுள்ளார்.
இந்த சர்ச்சைக்கு காரணமான சிவாவின் பேச்சு குறித்து எதுவும் கூறாமல், அவரை கண்டிக்காமல், 'தீயவர்களின் எண்ணத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்' என ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு, காமராஜர் புகழ்ந்தார் என்பது பச்சை பொய். காமராஜர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது, தி.மு.க.,வின் சிவா தானே?
அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க காமராஜர் குறித்த அவதுாறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது, உங்கள் தி.மு.க., கொத்தடிமைகள் தானே?
காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் வாயிலாக காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை தி.மு.க., செய்கிறது.
இவரே வெடிகுண்டு வைப்பாராம்; இவரே அதை எடுப்பது போல நடிப்பாராம். முதல்வர் ஸ்டாலின் இனியும் நடிக்க வேண்டாம்.
நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: காமராஜர் எந்த காலத்திலும், ஆட்சியாளர்களிடம் எதையும் கேட்டதில்லை. மரத்தடியில் கட்டிலை போட்டு படுத்து உறங்கியவர். அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கின்றனர்.
பா.ம.க., தலைவர் அன்புமணி: காமராஜர் குறித்து தான் பேசியது தவறு என்றோ, அதற்காக மன்னிப்போ சிவா தெரிவிக்கவில்லை. தி.மு.க., தலைமையும் அவரை கண்டிக்கவில்லை.
காமராஜர் குறித்து இழிவாக பேசியதற்காக, சிவாவை தி.மு.க., தலைமை கண்டிக்க வேண்டும். அவரது செயலுக்காக, தி.மு.க., தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: காமராஜர் குறித்த அநாகரிகமான பேச்சுக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல், விவாதப் பொருளாக்காமல் கடந்து செல்ல வேண்டும் என சிவா வெளியிட்டுள்ள அறிக்கை, தி.மு.க.,வினரின் அதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
காமராஜரை இழிவுபடுத்திய சிவா, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
முன்னாள் கவர்னர் தமிழிசை: காமராஜர் சேர்த்து வைத்த சொத்துக்களை, தேடி தேடி அனுபவித்து கொண்டிருக்கும் காங்கிரஸ், அவர் மீதான பழிச் சொற்களை சரியாக எதிர்க்கவில்லை. நாட்டுக்கு உழைத்த ஒரு தலைவரை நிந்தனை செய்யும் தி.மு.க.,வுடன், ஓட்டுக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் காங்கிரசின் மென்மையான எதிர்ப்பு நிலை கண்டிக்கத்தக்கது.
* தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி: தான் ஒரு மூன்றாம் தர பேச்சாளர் என்பதை சிவா நிரூபித்து விட்டார். தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், தி.மு.க., - காங்., கூட்டணி பலவீனமாகி விடும்.
* தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: சிவா, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை புகழ்வதாக நினைத்து, காமராஜரை கொச்சைப்படுத்தி அவதுாறாக பேசியதோடு, வரலாற்று திரிபை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காமராஜரை எதிர்த்து, இந்திரா உடன், கருணாநிதி தலைமையிலான தி.மு.க., கூட்டணி வைத்தது. காங்கிரஸ் கட்சியே, காமராஜர் மீது தீரா காழ்ப்புணர்ச்சியில் உள்ளது. அதனால் தான், காமராஜரை தி.மு.க., கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்கு கூட கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தபடியே தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. காமராஜரை கொச்சைப்படுத்தி பேசியதை, ஒரு போதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பெருந்ததலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், த.மா.கா., பொதுச்செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ், தமிழக காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவர் மாணிக்கவாசகம் உள்ளிட்டோரும், சிவா மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர்.
சிவா எம்.பி., வீட்டை
முற்றுகையிட முயற்சி சிவா எம்.பி., மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, திருச்சியில் அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை, போலீசார் கைது செய்தனர். தமிழக காங்., பொதுச்செயலர் சரவணன் தலைமையில், நேற்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே இருந்து, 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, ஆபீசர்ஸ் காலனியில் உள்ள சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அங்கே பாதுகாப்புக்கு இருந்த போலீசார், காங்கிரசாரை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். அப்போது, சிவாவுக்கு எதிராகவும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து பொதுச்செயலர் சரவணன் கூறுகையில், ''பொன்முடி அநாகரிகமாக பேசியதற்கு நடவடிக்கை எடுத்த தி.மு.க., தலைமை, சிவா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,'' என்றார்.