கூட்டணிக்கு பழனிசாமி அழைப்பு தி.மு.க., கூட்டணி கட்சிகள் பதிலடி

18 ஆடி 2025 வெள்ளி 11:38 | பார்வைகள் : 148
எங்கள் கூட்டணியில், பிரமாண்டமான கட்சி இணையப் போகிறது' என கூறியதுடன், 'கூட்டணிக்கு வரும் கட்சிகளை, ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்த நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளன.
பழனிசாமியின் அழைப்பு குறித்து, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ''இண்டி கூட்டணியை எவராலும் தகர்க்க முடியாது,'' என்றார்.
வி.சி., தலைவர் திருமாவளவன் கூறுகையில், ''தி.மு.க., கூட்டணியில் இருந்து, எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என பழனிசாமி அழைப்பு விடுப்பது, அவராக சொல்கிற ஒரு கருத்தாக தெரியவில்லை. யாரோ சொல்வதை, அவர் திருப்பி சொல்கிறார் என்றுதான் தோன்றுகிறது,'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் கூறுகையில், ''பழனிசாமி கூறுவது நல்ல நகைச்சுவை. பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு அழைப்பது, ரத்தினம் கம்பளம் அல்ல; ரத்தம் படிந்த கம்பளம். தி.மு.க., கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த, பழனிசாமி முயற்சி செய்கிறார்,'' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கூறுகையில், ''பழனிசாமி காலையில் ஒரு பேச்சு, அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு; லோக்சபா தேர்தலில் ஒரு பேச்சு. அதற்கு நேர்மாறாக இப்போது பா.ஜ.,வோடு கூட்டணி. கடந்த வாரம் கம்யூனிஸ்டுகளையே காணோம் என்றார்; இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல; வஞ்சக வலை என்பதை அறிந்தே வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ்., எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல், அ.தி.மு.க., சிக்கிக் கொண்டிருக்கிறது,'' என்றார்.