இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு

18 ஆடி 2025 வெள்ளி 10:38 | பார்வைகள் : 152
ரஷ்யா --- இந்தியா - சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. மூன்று நாடுகளுக்கு இடையிலான இந்த நட்புறவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
நட்பு
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது.
அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் 'பிரிக்ஸ்' அமைப்புக்கு அடித்தளம் அமைத்தது.
கடைசியாக, கடந்த 2017 டிசம்பரில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் 15வது முத்தரப்பு சந்திப்பு நடந்தது. மூன்று நாடுகளும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அடையாளம் காணவும் ஆர்.ஐ.சி., வழிவகுத்தது.
ஆனால், 2019ல் வந்த கோவிட், லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் மோதல் மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு ஆகிய பிரச்னைகளால், இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டது.
முத்தரப்பு உறவு
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, முடங்கியிருந்த மூன்று நாடுகளின் ஆர்.ஐ.சி., முத்தரப்பு உறவுக்கு புத்துயிர் அளிப்பதற்கான பேச்சுகள் மீண்டும் துவங்கி உள்ளன.
அமெரிக்காவை எதிர்ப்பதற்கு இந்தியா, ரஷ்யாவின் உதவி தேவை என்பதால், முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முயற்சிக்கு சீனாவும் தற்போது முழு ஆதரவு தெரிவித்துள்ளது.