Paristamil Navigation Paristamil advert login

அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!

அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!

18 ஆடி 2025 வெள்ளி 09:38 | பார்வைகள் : 175


இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியதாக பலமுறை இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அசைவ பால் விஷயத்தில் பேச்சில் முட்டுக்கட்டை நிலவுவதாக தெரிகிறது.

இந்தியாவுக்குப் பிறகு பேச்சைத் தொடங்கிய பல நாடுகளுடன், அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டது. ஆனால், பால் பண்ணைத் துறைதான் இந்தியாவுடனான பேச்சில் இழுபறியாக இருக்கிறது.

வேளாண்மை, கால்நடைத் துறைகளில் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறப்பதில் இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

அமெரிக்க பால் பொருட்களை அனுமதிப்பதில், இந்திய கலாசார தொடர்பு குறித்த கவலையால் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

அசைவ பால்?


அமெரிக்காவில் பசுக்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. பன்றி, மீன், நாய், குதிரை ஆகியவற்றின் கொழுப்பு மற்றும் பாகங்கள் கலந்த உணவுகள் வழங்கப்படுவதால் அவற்றின் பால் அசைவமாக கருதப்படுகிறது.

இந்தியாவில், பசுக்கள் கலாசார முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுக்கு சுத்த சைவ உணவு முறையே பின்பற்றப்படுகிறது. மேலும், மதரீதியான சடங்குகள், கோவில்களில் பால், நெய் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அமெரிக்க பால், பால் பொருட்களை அனுமதிக்க இந்தியா மறுக்கிறது.

எனவே, அசைவம் சார்ந்த உணவுகள் வழங்கப்படாத பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பால், பால் பொருட்கள் என்பதற்கான சான்றிதழை கட்டாயமாக்கினால், இறக்குமதியை அனுமதிக்க பரிசீலிப்பதாக இந்தியா கூறுகிறது.

அமெரிக்க பால் பண்ணை பொருட்கள் இறக்குமதியை அனுமதித்தால், உள்நாட்டில் பால், பால் பொருட்கள் விலை குறைய நேரிடும் என்பதாலும், சிறிய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதாலும் இந்தியா தயங்குகிறது. இது பேச்சு நடத்தக்கூட வாய்ப்பற்ற சிவப்புக் கோடு என்று இந்தியா கூறி வருகிறது.

மற்றொரு விலங்கின் இறைச்சி, ரத்தத்தை உணவாகக் கொண்ட பசுவிடம் இருந்து பெறப்படும் வெண்ணெய்யை சாப்பிடுவது குறித்து கற்பனை செய்து பாருங்கள். இந்தியா அதை ஒருபோதும் அனுமதிக்காது.

அஜய் ஸ்ரீவத்சவா,

உலக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (ஜி.டி.ஆர்.ஐ.,)

அமெரிக்க பால் பொருட்கள் இறக்குமதி அனுமதிக்கப்பட்டால், இந்திய பால், பால் பொருட்கள் உற்பத்தி குறைந்தபட்சம் 15 சதவீதம் சரிவடையும். பால் சந்தையில் ஆண்டுக்கு 1.03 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

-பாரத ஸ்டேட் வங்கி ஆய்வு

2023 உலக அட்லாஸ் அறிக்கையின்படி, இந்திய மக்களில் 38 சதவீதம் பேர் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள்.

பசுக்கள் இறைச்சி, எலும்பு துாள், ரத்தம், திசுக்கள் நேரடியாகவோ, பவுடராகவோ, மாற்று உணவில் கலந்தோ வழங்கப்படவில்லை என்ற சான்றிதழ் பெறுவது, கால்நடை பராமரிப்பு, பண்ணை துறை விதிகளில் கட்டாயம்.


2023-24 - இந்திய பால் உற்பத்தி 23.93 கோடி டன்.

-கால்நடை பராமரிப்பு துறை புள்ளிவிபரம்.


கலாசார அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பான பால் பண்ணைத் துறையில் இறக்குமதியை அனுமதிப்பதில்லை என்பதில், அமெரிக்காவிடம் இந்தியா உறுதி காட்டி வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்