தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை

17 ஆடி 2025 வியாழன் 13:42 | பார்வைகள் : 689
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா?'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: அற்புதமான ஆட்சியாளர் காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு தி.மு.க.,வே முக்கிய பொறுப்பு, முதன்மை பொறுப்பு. 1967ம் ஆண்டு தேர்தலில், எவ்வளவு பொய்களை சொல்லி கர்மவீரர் காமராஜரை வீழ்த்தினார்கள். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுப்பட்ட போது, இந்திரா தி.மு.க., உடன் இணைந்து தமிழகத்திலும் வர கூடாது, இந்தியாவிலும் வர கூடாது என்பதற்காக செயல்பட்டார்கள் என்பதற்கு 1971ம் ஆண்டு தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு.
குட்டையில் ஊறிய மட்டைகள்
கர்மவீரர் காமராஜர் பற்றி பேசுவதற்கு தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை. ஒரு சதவீதம் கூட உரிமை இருப்பதாக நான் பார்ப்பதில்லை. 1967ம் ஆண்டு தேர்தலின் போது கருணாநிதி பேசியது, எல்லாவற்றையும் எடுத்து போட்டு காட்டினால், மானம் இருக்கும் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட தி.மு.க., கூட்டணியில் இருக்க மாட்டார்கள். கடைசி காலம் வரை சொத்துக்களை சேர்க்காதவர், எளிமையானவர். தி.மு.க., அ.தி.மு.க., குட்டையில் ஊறிய மட்டைகள் என்று கூறியவர் காமராஜர்.
தனியாக போட்டியிட தயாரா?
வரலாற்றை மாற்றி திரித்து பேசுவதை கண்டிக்கிறேன். மானம் இருக்கும் காங்கிரஸ் கட்சி பார்த்து கொண்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா? இன்னொரு கூட்டணிக்கு போங்க என்று நான் சொல்லவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து வருவதற்கு தயாரா? ஆனால் அவர்கள் வர மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு, நாளைக்கு கொஞ்சம் சவுண்ட் விடுவார்கள்.
நாளை மறுதினம், தி.மு.க.,வில் இருந்து யாராவது டில்லியில் ராகுல், சோனியாவை சந்திப்பார்கள். அதன் பிறகு, டோஸ் விட்ட பிறகு, தி.மு.க.,வினரின் அடிமாடாக காங்கிரஸ் கட்சியினர் வேலை செய்வார்கள். இது காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். புதிதாக எதும் நடக்கப்போவதில்லை.
ஒரே ஒரு விஷயம்
இதனால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும், முக்கிய தலைவர்களுக்கும் நான் கேட்க கூடிய ஒரே ஒரு விஷயம். கர்ம வீரரை காமராஜரை தவிர காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திற்கு எந்தவொரு அடையாளமும் கிடையாது. வேறு எந்தவொரு தலைவரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு நீங்கள் கூட்டணியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை நான் மட்டுமல்ல சாதாரண மக்களும் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.