சுற்றுலாத்தலங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!

17 ஆடி 2025 வியாழன் 08:15 | பார்வைகள் : 2017
பரிசில் உள்ள சுற்றுலாத்தலங்களில் இடம்பெறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
Champ-de-Mars, Trocadéro, Montmartre, லூவர், ஈஃபிள் கோபுரம், டிஸ்னிலேண்ட் பரிஸ் என பல இடங்களில் பதிவான குற்றச்செயல்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஏமாற்றும் வேலைகள், பிக் பொக்கட், திருட்டு, ஆயுத முனையில் கொள்ளை, போலியான பொருட்களின் விற்பனை என பலதரப்பட்ட குற்றச்செயல்கள் கணிசமாக குறைவடைந்துள்ளன.
குறிப்பாக சென்ற 2024 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளின் போது அதிகளவான சுற்றுலாப்பயணிகள் பரிசுக்கு வருகை தந்தபோது, விதிவிலக்காக இந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் 37% சதவீதத்தால் இது வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்கள் 72% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த தரவு ‘சுற்றுலாப்பயணிகளை இலக்கு வைத்து இடம்பெறும் குற்றச்செயல்களின்’ தரவுகள் மட்டுமே. பொதுவான குற்றச்செயல்களின் எண்ணிக்கை வீதத்தை பரிஸ் காவல்துறையினர் ஆண்டின் இறுதியில் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.