Paristamil Navigation Paristamil advert login

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு

16 ஆடி 2025 புதன் 05:23 | பார்வைகள் : 408


ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 36. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். பல மருத்துவமனைகளில் நர்சாக பணிபுரிந்த அவர், பின், அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் தலைநகர் சனாவில் சொந்தமாக, 'கிளினிக்' துவக்கினார்.

நிமிஷாவின் வருமானம், கிளினிக்கின் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவருக்கு தலால் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. 2017ல், தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார்.

அதிக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால், தலால் உயிரிழந்தார்.

அவரை நிமிஷா விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2023ல், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நிமிஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது, நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலாலின் குடும்பத்தாருடன், இந்திய மத தலைவர் அபுபக்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்திய அதிகாரிகள் ஏமனில் உள்ளூர் சிறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். வழக்கின் தொடக்கத்தில் இருந்தே, இந்த விஷயத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி, அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த சூழலில் தற்போது மரண தண்டனை ஒத்திவைக்க வழி வகுத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்