உக்ரைனுக்கு புதிய பிரதமர்.... உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முடிவு

15 ஆடி 2025 செவ்வாய் 13:15 | பார்வைகள் : 577
உலகை பாதித்த ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கி, நாடாளுமன்றத்திற்கு முக்கியமான அமைச்சரவை மாற்றங்களை அறிவித்துள்ளார்.
செலன்ஸ்கியின் புதிய முன்மொழிவின்படி, தற்போதைய பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ (39), உக்ரைன் பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.
இவரது நியமனத்திற்கான முக்கிய காரணமாக, அமெரிக்காவுடன் மதிப்புமிக்க கனிம ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது குறிப்பிடப்படுகிறது.
மற்றொரு முக்கிய மாற்றமாக, தற்போதைய பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் (49), பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
கோவிட்-19 மற்றும் போரின்போது அரசைச் சீராக வழிநடத்திய ஷ்மிகலின் அனுபவம் பாதுகாப்பு துறைக்கு நன்மையாக அமையும் என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
“நாடு புதிய சவால்களை எதிர்கொண்டும், மக்கள் சோர்வடைந்த நிலையில், அரசாங்கத்தில் புத்துணர்வு தேவைப்படுகிறது” என ஜெலென்ஸ்கி விளக்கம் கொடுத்துள்ளார்.
போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைன் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, உள்ளூர் நிவாரண திட்டங்களை விரிவாக்குவது மற்றும் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது ஆகியவை ஸ்விரிடென்கோவின் முக்கிய முன்னுரிமைகளாகக் கூறப்படுகிறது.
இந்த நியமனங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும் நிலையில், பெரும்பாலான உறுப்பினர்கள் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக இருப்பதால், மாற்றங்கள் சாத்தியமானவை என எதிர்பார்க்கப்படுகிறது.