செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனை?

14 ஆடி 2025 திங்கள் 14:12 | பார்வைகள் : 161
செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் கார்பன் பரிசோதனையை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டுமென காணாமல்போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே. தற்பரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ள நிலையிலேயே ஜே. தற்பரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே. தற்பரன் மேலும் இதுபற்றி தெரிவிக்கையில்:
செம்மணியில் எப்போது உடல்கள் புதைக்கப்பட்டன என்பதை தீர்மானிப்பது அவசியம். இதற்காக முறையாக கார்பன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆதாரங்கள் இல்லாதபோது இந்த முறையை பயன்படுத்துவது வழமை. எனினும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனையை பயன்படுத்த வேண்டுமா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்க வேண்டும்.
நாட்டில் இதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாதுள்ளன. இதனால் எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவுக்கே அனுப்ப வேண்டும்.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஜூன் இறுதி வாரத்தில் ஆரம்பித்து 15 நாட்கள் இடம்பெற்றன. அகழ்வு நடவடிக்கை மூலம் 15 நாட்களில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டன.
இதேவேளை செம்மணி மனித புதைகுழியை அகழும் பணிகளுக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ராஜ்சோமதேவ எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
மற்ற தரப்பினரிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் பெற வேண்டும்.காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் பணியை முன்னெடுக்க நாட்டில் அனுபவம் வாய்ந்த நபர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
இருப்பினும் கோரப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் காணாமல்போனவர்களின் அலுவலகம் மற்றும் அரசாங்கமே கூட்டாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.