Paristamil Navigation Paristamil advert login

ஆமதாபாத் விமான விபத்தில் சதி இல்லை?: சொல்கிறது பிளாக் பாக்ஸ்

ஆமதாபாத் விமான விபத்தில் சதி இல்லை?: சொல்கிறது பிளாக் பாக்ஸ்

13 ஆடி 2025 ஞாயிறு 09:35 | பார்வைகள் : 360


குஜராத்தின் ஆமதாபாதில், 'ஏர் இந்தியா' விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளான நிலையில், அது குறித்து விசாரணை நடத்திய ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பிரிவு, முதற்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், சதி வேலை காரணமாக விபத்து நடந்ததாக எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், விமானத்தின் இன்ஜின்களுக்கான எரிபொருள் வினியோகம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், எரிபொருள் வினியோகம் எப்படி துண்டிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.

குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு, இரண்டு விமானிகள், 10 பணியாளர்கள், 230 பயணியர் என, மொத்தம் 242 பேருடன், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான, 'போயிங் 787 - 7 ட்ரீம்லைனர்' இரட்டை இன்ஜின்கள் உடைய விமானம், ஜூன் 12ல் புறப்பட்டது.

ஏறத்தாழ 600 - 800 அடி உயரம் மட்டுமே பறந்த விமானம், சில நிமிடங்களிலேயே, அருகே உள்ள மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. விமானம் வெடித்துச் சிதறிய நிலையில், விடுதி கட்டடமும் பலத்த சேதமடைந்தது.

இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த ஒரேயொரு பயணி தவிர, 241 பேரும்; விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் உட்பட 19 பேரும் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து, விமான விபத்துகளை விசாரிக்கும் புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். விபத்து பகுதியில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டியை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக, 15 பக்கங்கள் அடங்கிய முதற்கட்ட விசாரணை அறிக்கையை, மத்திய அரசிடம் விமான விபத்துகள் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்துள்ளது.

அதன் விபரம்:

விமானம் அதன் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வேகமான, 180 நாட்ஸ் என்ற அளவை, பிற்பகல் 1:38:42 மணிக்கு எட்டியது.

இன்ஜின் 1 மற்றும் இன்ஜின் 2க்கான எரிபொருள், 'கட்- ஆப்' சுவிட்சுகள், ஒரு வினாடிக்குள்ளே, 'ரன்' நிலையில் இருந்து கட் -ஆப் நிலைக்கு மாறின.

தொடர்ந்து, 'காக்பிட்' எனப்படும் விமானிகள் அறையில், 'ஏன் எரிபொருளை கட் -ஆப் செய்தீர்கள்?' என, ஒரு விமானி மற்றொரு விமானியிடம் கேட்பது பதிவாகி உள்ளது. அதற்கு அவர், 'நான் கட் ஆப் செய்யவில்லை' என, பதில் அளிக்கிறார்.

பின், 10 வினாடிகள் கழித்து, பிற்பகல் 01:38:52 மணிக்கு, இன்ஜின் 1க்கான எரிபொருள் சுவிட்ச், கட் ஆப் நிலையில் இருந்து, ரன் நிலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

நான்கு வினாடிகள் கழித்து, இன்ஜின் 2க்கான எரிபொருள் சுவிட்சும், கட் ஆப் நிலையில் இருந்து ரன் நிலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அதாவது, ஆப் ஆன இன்ஜின்களை, 'ரீ ஸ்டார்ட்' செய்ய விமானிகள் முயற்சித்துள்ளனர். பிற்பகல் 1:39:05 மணிக்கு, அதாவது ஒன்பது வினாடிகள் கழித்து, விமானிகளில் ஒருவர், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு, அவசர காலத்தில் விடுக்கும், 'மேடே' அழைப்பை விடுத்துள்ளார். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

சில வினாடிகளில், விமானம் விபத்தில் சிக்கியது. இன்ஜின்கள் வேலை செய்வதை நிறுத்திய போது, 'ரேம் ஏர் டர்பைன்' சாதனம் அவசர ஹைட்ராலிக் சக்தியை வழங்க தானாகவே செயல்படுத்தப்பட்டது. இது, சிசிடிவி காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

விமானப் பாதையில் பறவைகளின் நடமாட்டம் எதுவும் பதிவாகவில்லை. விமான நிலைய ஓடுபாதை எல்லையை கடப்பதற்கு முன்பே, விமானம் உயரத்தை இழக்க துவங்கியது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரப்பட வேண்டாம்!

முதற்கட்ட விசாரணை அறிக்கையே வந்துள்ளது. அவசரப்பட்டு நாம் எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது. விசாரணைக் குழுவினருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். இறுதி அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என, நம்புகிறோம். அதன்பின், நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். தற்போதே கருத்து தெரிவிப்பது முதிர்ச்சியற்றதாக இருக்கும்.

ராம் மோகன் நாயுடு விமான போக்குவரத்து அமைச்சர், தெலுங்கு தேசம்

அறிக்கையின் சிறப்பம்சங்கள்

• 230 பயணியர் மற்றும் 12 பணியாளர்கள் விமானத்தில் இருந்தனர்; இதில், 15 பேர் வணிக வகுப்பிலும், இரு குழந்தைகள் உட்பட 215 பேர் பொருளாதார வகுப்பிலும் இருந்தனர்.

• விமானத்தில், 54,200 கி.கி., எரிபொருள் இருந்தது; விமானத்தின் புறப்படும் எடை அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் 2,13,401 கிலோவாக இருந்தது. விமானத்தில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை.

• இந்திய நேரப்பட்ட மதியம் 1:08:39 மணிக்கு விமானம் புறப்பட்டது. இயந்திர எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், 1 வினாடி நேர இடைவெளியுடன் அணைக்கப்பட்டன; பின்னர் இயக்கப்பட்டன.

• 1:09:05 மணிக்கு, விமானிகளில் ஒருவர் 'மே டே' என மூன்று முறை அறிவித்தார். விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொள்ள முயற்சித்த போது பதில் இல்லை. அதேசமயம், விமான நிலைய எல்லைக்கு வெளியே விமானம் விபத்துக்குள்ளானதை அதிகாரிகள் கண்டனர்.

• இரண்டு இஞ்சின்களும் மீட்கப்பட்டு, விமான நிலையத்தில் உள்ள ஒரு விமானங்கள் பராமரிக்கப்படும் இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

• விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் தொட்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்தின் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டன. இதில், எந்த பிரச்னையும் இல்லை என தெரியவந்துள்ளது.

விமானியின் தற்கொலை முயற்சியா?

எரிபொருள் சுவிட்சுகள் திட்டமிட்டு அணைக்கப்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அது வேண்டுமென்றே நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து, நாட்டின் முன்னணி விமானப் போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறியதாவது:எரிபொருள் சுவிட்சுகள் ஏதேச்சையாகவே, தவறுதலாகவே அணைக்கப்பட முடியாது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. எரிபொருள் சுவிட்சுகள் நிறுத்தப்பட்டால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தே, அதை அணைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. விமானியில் ஒருவர் இதை வேண்டுமென்றே கூட செய்திருக்கலாம். கேப்டனுக்கு சில மருத்துவ வரலாறு இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். புறப்பட்ட சில நொடிகளில், இரண்டு சுவிட்சுகளும் ஒன்றன் பின் ஒன்றாக 'ஆப்' நிலைக்கு மாறியது ஏன் என்பது விளக்கப்படவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் சுவிட்ச் என்றால் என்ன?

விமானம் இயங்குவதற்கான எரிபொருள் வினியோகத்தை கட்டுப்படுத்துவது இந்த சுவிட்ச் தான். புறப்படும் போது விமான இயந்திரத்தின் இயக்கத்தைத் துவக்கவோ, நிறுத்தவோ, பறக்கும்போது இயந்திர செயலிழப்பு ஏற்பட்டால் இயந்திரத்தை நிறுத்தவோ, ரீஸ்டார்ட் செய்யவோ விமானிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.இது குறித்து மூத்த விமான நிபுணர் ஒருவர் கூறுகையில், 'ஓர் விமானி தற்செயலாக இந்த எரிபொருள் சுவிட்சை நிறுத்தி விட முடியாது. அதை இயக்க அல்லது நிறுத்த, 'லீவர்' போல் இருக்கும் அதை முதலில் மேல் நோக்கி இழுக்க வேண்டும். அதன் பின்னரே அந்த சுவிட்சை, 'ரன்' அல்லது, 'கட் ஆப்' நிலைக்கு மாற்ற முடியும். தவறுதலாகவோ, ஏதேச்சையாகவோ இயக்கும் வகையில் இந்த சுவிட்சுகள் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் விமானி, அதை நிறுத்தினால் அது உடனடி விளைவை ஏற்படுத்தும். ஏனெனில், அதை நிறுத்தினால் இயந்திரத்திற்கான எரிபொருள் சப்ளை உடனடியாக தடைபடும். இந்த எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுக்கு தனி வயரிங் மற்றும் மின்சாரம் உள்ளது. இந்த சுவிட்சை கட்டுப்படுத்த ஒரு எரிபொருள் வால்வு உள்ளது' என, தெரிவித்தார்.

எரிபொருள் வினியோகம் தானாக துண்டிக்கப்படுமா?

ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை விமானி எஹ்சான் காலித் கூறுகையில், ''எரிபொருள் சுவிட்ச் தானாக நகராது. இது, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஒரு இயந்திர செயல்முறை. விமானம் தரையிறங்கிய பின், 'ரன்' நிலையில் இருந்து, 'கட் ஆப்' முறைக்கு சுவிட்சை இயந்திர செயல்முறையில் மாற்ற வேண்டும். சுவிட்சின் அடிப்பகுதியில் இருக்கும் 'ஸ்பிரிங்'கை இழுத்த பின்னரே, அதை நகர்த்த முடியும்,'' என்றார்.

சுவிட்சை விமானி நகர்த்தினாரா?

விமானத்தை இணை விமானி கிளைவ் குந்தர், 32, இயக்கிய நிலையில், கேப்டன் சுமீத் சபர்வால், 56, கண்காணித்து உள்ளார். 'ஏன் எரிபொருளை கட் -ஆப் செய்தீர்கள்?' என்ற கேள்வியை யார் எழுப்பியது என்பது தெரியவில்லை. அப்படி என்றால், இருவரில் யார் அந்த சுவிட்சை ஆப் செய்தனர்? மேலும், விமானம் வானில் 30 வினாடிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், விமானிகள் அறையில் இருவரும் பேசிய ஒரேயொரு குரல் பதிவு மட்டுமே கிடைத்துள்ளது. 30 வினாடிகளில் அதை மட்டும் அவர்கள் பேசினரா அல்லது குரல் பதிவுகளில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது.

இயந்திர கோளாறு ஏற்பட்டதா?

இரண்டு இன்ஜின் சுவிட்சுகளும் ஒரே வினாடிக்குள் செயலிழக்கும் சம்பவம் அரிதான நிகழ்வு என நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 முதல், ட்ரீம்லைனர் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் தொடர்பான குறைபாடுகள் கண்டறியப்படாததால், அது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. விமான விபத்துக்கு சுவிட்ச் செயல்படாதது தான் காரணமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இறுதி விசாரணை அறிக்கையில் முழு விபரங்களும் தெரியவரும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்