தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்: அண்ணாமலை நம்பிக்கை

11 ஆடி 2025 வெள்ளி 10:35 | பார்வைகள் : 148
தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்; சனாதன தர்மம் காக்க சன்னியாசிகளுடன் பயணிப்பேன்,'' என, பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில், சமூக சேவகர்கள், 13 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து, விழா மலர் வெளியிடப்பட்டது. இதில், பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: எல்லா இடங்களிலும், எல்லா விஷயங்களையும் எடுத்து செல்லக்கூடிய துணிவு ஆதினங்களுக்கு உள்ளது.
ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் வரக்கூடிய குரு பவுர்ணமி அன்று வட இந்தியாவில், இரவு குறைவாகவும், பகல் அதிகமாகவும் இருக்கும். இயற்கையாகவே இந்த குரு பவுர்ணமி ஒரு விசேஷமான நாள்தான். இந்நாளுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும். எனவே, இந்நாளில் குருவிடம் அருளாசி பெறும்போது, இன்னும் நல்ல மனிதர்களாக, நம்முடைய ஆன்மிகத்தை விரிவாக பார்க்கக்கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.
மிக மிக குறைவாக மூச்சு விடுகின்ற ஆமைக்கு ஆயுள் அதிகம். பிராண ரகசியத்தை யார் உணர்ந்து கொள்கின்றனரோ, அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்பதை மிகத்தெளிவாக, ஆமை போன்ற ஜீவராசிகளை பார்க்கும் பொழுது நமக்கு தெரியும். பூக்களால் நாம் செய்யக்கூடிய பூஜைகள், மணியின் வாயிலாக வரக்கூடிய ஓசைகள், தீபாரதனை வாயிலாக வரக்கூடிய வெப்பம் என, இவை அனைத்தும் ஜீவசமாதியில் இருக்கக்கூடியவர்களின் ஆன்மா இன்னும் வீரியமாகவும், பிரகாசமாகவும் இருக்க காரணமாகிறது.
எனவே, எங்கெல்லாம் நம்முடைய பெரியவர்கள் இருக்கின்றார்களோ, அங்கே முறையான பூஜைகள், நம்முடைய வழிபாடுகள் செய்ய வேண்டும். ராஜாவாக இருந்தாலும், சன்னியாசிக்கு முன் தரையில்தான் அமர வேண்டும்.
இந்நாட்டில் ராஜா, முதலமைச்சர் என யாராக இருந்தாலும் சன்னியாசிகள் முன், என்று தரையில் அமர ஆரம்பிக்கிறார்களோ, அன்றுதான் உண்மையான ஆன்மிக ஆட்சி வந்துவிட்டது எனலாம். தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி அமையும். இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன், சனாதன தர்மம் காக்க சன்னியாசிகள் உடன் பயணிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில்,''குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை. குரு இல்லாமல் கடவுளை காணமுடியாது. அறியாமையை விலக்க குரு அவசியம். எனவே, குருவின் ஆசி பெறுவதன் வாயிலாக வாழ்க்கை சிறக்கும்,'' என்றார்.