ஆபத்தானதாகக் கருதப்படும் வெளிநாட்டவர்கள் மீது தற்காலிக காவல் 210 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது!!!

9 ஆடி 2025 புதன் 20:56 | பார்வைகள் : 1084
பாதுகாப்புக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் வெளிநாட்டவர்களை 210 நாட்கள் வரை தற்காலிகக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்யபட்டுள்ளது.
இந்த சட்டம், பிலிப்பைன் மாணவி ஒருவரின் கொலைக்குப் பின்னர் உருவானது. குற்றவாளி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சரும் இந்த சட்டத்தை வலியுறுத்தியுள்ளார். புதிய சட்டம், கொலை, பலாத்காரம், போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்றவர்களையும், நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பெற்றவர்களையும் நீண்ட காலம் காவலில் வைக்க இந்த சட்டம் அனுமதிக்கிறது.
தற்போது, வெளிநாட்டவர்களை தற்காலிகக் காவல் நிலையங்களில் (CRA) அதிகபட்சம் 90 நாட்கள் வரை வைத்திருக்கலாம். தீவிரவாத குற்றங்களில் குற்றவாளிகளானவர்கள் 210 நாட்கள் வரை காவலில் வைக்கப்படலாம்.
இடதுசாரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. "அமைதிக்கு ஆபத்தான நடத்தை" என்பது தெளிவற்ற வார்த்தை என்றும், இது தவறான முறையில் பலர் மீது பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
2024-இல் தற்காலிகக் காவலின் சராசரி காலம் 33 நாட்களாக இருந்தாலும், நாடு கடத்தல் வெற்றிச் சதவீதம் அதிகரிக்கவில்லை என்பது அவர்களின் வாதம். சில மாற்றப்பட்ட குடிவரவு சட்ட விதிகளும் இந்தச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன, உதாரணமாக கைரேகை மற்ற புகைப்படம் போன்றவற்றை ஒத்துழைப்பின்றி கட்டாயப்படுத்தி எடுக்க முடியும்.