Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தை படுபாதாளத்துக்கு தள்ளியது தான் ஸ்டாலின் மாடல் சாதனை: இ.பி.எஸ்

தமிழகத்தை படுபாதாளத்துக்கு தள்ளியது தான் ஸ்டாலின் மாடல் சாதனை: இ.பி.எஸ்

9 ஆடி 2025 புதன் 07:20 | பார்வைகள் : 138


அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழகத்தை படுபாதாளத்திற்கு தள்ளியது தான் ஸ்டாலின் அரசின் சாதனை,'' என எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், ஸ்டாலின் அரசால் அராஜக போக்குடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 2021 தேர்தலின் போது, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நீங்கள், 'ஆட்சி அமைந்ததும், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை திமுக நிறைவேற்றும்... ஆக' என்று படித்த துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா? சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் அளவிற்கு பகுதி நேர ஆசிரியர்களை இந்த திமுக அரசு தள்ளியிருப்பது வெட்கக்கேடானது.

அதே போல, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் பாபு கத்தியால் குத்தப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போதே, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இது ஸ்டாலின் மாடல் அல்லவா? வழக்கம் போல கடந்து சென்றதன் விளைவே இந்த சம்பவம்.

அரசு மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை; இதற்கு சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கத் திராணியற்ற முதல்வரே பொறுப்பு! வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, அவர்களை தெருவில் போராட நிறுத்தியதோடு அல்லாமல், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழகத்தை படுபாதாளத்திற்கு தள்ளியது தான் ஸ்டாலின் Failure மாடல் சாதனை!

கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்; ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்