தீயில் ஆறு பேரைக் காப்பாற்றிய ஒருவருக்கு - அரச கெளரவம்!!

8 ஆடி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 1224
பரிசில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கிய ஆறு பேரை துணிச்சலாக செயற்பட்டு மீட்ட Fousseynou Cissé என்பவருக்கு அரசு கெளரவம் அளிக்க உள்ளது.
18 ஆம் வட்டாரத்தின் Rue de la Chapelle வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டது. அதன்போது, 39 வயதுடைய குறித்த நபர் துணிச்சலாக செயற்பட்டு ஆறு பேரை தீயில் இருந்து மீட்டார். காப்பாற்றப்பட்டவர்களில் இரு குழந்தைகளும் உள்ளனர்.
அவர்களை துணிச்சலாக செயற்பட்டு காப்பாற்றிய Fousseynou Cissé இற்கு ‘தைரியத்தை பாராட்டி’ கெளரவம் வழங்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தீ விபத்து இடம்பெற்ற கட்டிடத்துக்கு அருகே உள்ள கட்டிடத்தில் குறித்த நபர் வசிப்பதாகவும், வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும்போது தீ பரவலை பார்த்துவிட்டு உடனடியாக செயற்பட்டு அவர்களை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.