Paristamil Navigation Paristamil advert login

வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்

வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்

7 ஆடி 2025 திங்கள் 11:10 | பார்வைகள் : 608


கடத்தல் குருவிகள் தற்போது புது வியூகத்தை பயன்படுத்தி, விமானத்தில் தங்கம் கடத்துவது தெரிய வந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்படுகிறது. இதன் கீழ் சுங்க துறையும், மத்திய வருவாய் புலனாய்வு துறையும் செயல்படுகின்றன. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில், வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்படும் தங்கம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்வது, இத்துறையின் பிரதான வேலை.

உலகளவில் தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலுக்கு என, 'சிண்டிகேட்' அமைத்து, இடைத்தரகர்கள், குருவிகள், வியாபாரிகள் செயல்படுகின்றனர். அதன்படி, சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் குருவிகள், 50 கிராம் முதல் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வருகின்றனர். இதில், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல வழிகளை, குருவிகள் கையாளுகின்றனர்.

இது குறித்து, சுங்க துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் குருவிகள், 'கமிஷன்' அடிப்படையில் கடத்தலில் ஈடுபடுகின்றனர். தங்கம் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்த பின், கடத்தல் குறைந்து வருகிறது. விமான இருக்கைகளில் பதுக்கி வைப்பது, உடைமைகள், மருந்து மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் பதுக்கி கடத்துவது போன்ற பழைய வழிகளை, நாங்கள் எளிதாக கண்டுபிடித்து விடுகிறோம்.

பொதுவாக, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு தான் தங்கம் கடத்தப்படும். அதாவது, துபாயில் இருந்து சென்னைக்கு அதிகளவில் தங்கம் கடத்துவர். தமிழகத்தில் தங்கத்திற்கு தேவை அதிகம் என்பதால், இந்த வழியில் வரும் கடத்தல் தங்கத்தை கண்டுபிடிக்க, சோதனைகள் கடுமையாக்கப்படும். அதில், எளிதாக பறிமுதல் செய்து விடுவோம்.

ஆனால், சமீப நாட்களாக கடத்தல் குருவிகள் வேறு வியூகத்தை வகுத்து செயல்படுத்துகின்றனர். உள்நாட்டு விமான நிலையங்களில் சுங்க சோதனை கிடையாது. இதை பயன்படுத்தி, வழித்தடங்களை மாற்றி மாற்றி பயணம் செய்ய துவங்கி உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இரண்டு சம்பவங்கள் இது போன்று நடந்துள்ளன. கடந்த மாதம் 30ம் தேதி, கோல்கட்டாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில், ஒருவர் தங்கத்துடன் பிடிபட்டார். அவரிடமிருந்து, 409 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நபர் பயன்படுத்திய வியூகம் சற்று வித்தியாசமானது.

துபாயில் இருந்து கடத்தல் தங்கத்துடன் வங்கதேச தலைநகர் டாக்கா சென்றுள்ளார்; அங்கிருந்து கோல்கட்டா வந்துள்ளார். பின், கோல்கட்டாவில் இருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கி விட்டார்.

நேரடியாக சர்வதேச விமான நிலையம் வந்தால் பிடிபட்டு விடுவோம் என்பதால், இந்த முறையை அவர் கையாண்டுள்ளார். ஆனாலும், நாங்கள் விரித்த வலையில் எப்படியோ சிக்கிக் கொண்டார். அவரை விசாரித்த போது தான், கடத்தல் சிண்டிகேட் வகுத்துள்ள இப்புதிய முறை தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்