பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

7 ஆடி 2025 திங்கள் 08:10 | பார்வைகள் : 151
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் எங்களுக்கும், த.வெ.க., தலைவர் விஜய்க்கும் இருக்கும் பொதுவான நோக்கம் என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 15 தமிழக மீனவர்களை சென்னை விமான நிலையத்திற்கு சென்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். அவர்களுக்கு சால்வை அணிவித்தும், பழங்கள், இனிப்புகளை கொடுத்து வரவேற்பு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மீனவர்களின் நிலை குறித்து தகவல் கிடைத்தவுடன், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினேன். உடனடியாக தடையின்றி உணவுப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றொரு தீவில் உள்ள மீனவர்களையும் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது, எனக் கூறினார்.
இதனிடையே, எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலாவது; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் எங்களுக்கும், த.வெ.க., தலைவர் விஜய்க்கும் இருக்கும் பொதுவான நோக்கம். அந்த ஒற்றுமையின் காரணமாக அடிப்படையில் கூட்டணி குறித்து பரிந்துரைத்தேன். என்.டி.ஏ., கூட்டணியின் கீழ் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் இணைந்ததில் இருந்தே, தி.மு.க., தலைவர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பி டீம் என்ற கதையை கூறி வருகின்றனர். விஜய்யை போலவே கமலையும் பி டீம் என்று கூறினார்கள். தற்போது, தி.மு.க.,வின் ஆதரவுடன் கமல் எம்.பி., ஆகி உள்ளார், எனக் கூறினார்.