அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு! த.வெ.க

5 ஆடி 2025 சனி 10:43 | பார்வைகள் : 151
சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும், விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்தும், சென்னையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
த.வெ.க., மாநில செயற்குழு கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செயற்குழு கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் விஜய்க்கு வழங்கப்பட்டதுடன், சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் களமிறங்குவார் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், கீழடி தமிழர் நாகரிகத்தை மூடி மறைப்பதாக மத்திய அரசையும், போலீஸ் விசாரணையில் பலர் கொல்லப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வரையும் கண்டித்து கூட்டத்தில் பேசப்பட்டது. பின், த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாவது:
நாட்டில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, வேற்றுமையை விதைத்து, பா.ஜ., குளிர்காய நினைக்கிறது. பா.ஜ.,வின் இந்த விஷமத்தனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம்; தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது.
சமூக நீதி, நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆழமாக வேரூன்றியது தமிழக மண். இங்கு, ஈ.வெ.ரா., அண்ணாதுரையை அவமதித்தோ, தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்தோ அரசியல் செய்தால், அதில் பா.ஜ., வெற்றி பெறாது.
சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.,வுடன் கூடி, குழைந்து கூட்டணி போக, நாங்கள் தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ இல்லை. அவர்களுடன் கொஞ்சி குழாவும் இரு கட்சியினருடனும் ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ள மாட்டோம்.
கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம். த,வெ.க., தலைமையில் தான் கூட்டணி அமையும். அந்த கூட்டணி எப்போதும் தி.மு.க., - பா.ஜ.,வுக்கு எதிரானதாக இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை; இது இறுதியானது.இவ்வாறு விஜய் பேசினார்.
விமர்சிக்காதது ஏன்?
கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை. தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் எதிரானதாக த.வெ.க., இருக்கும் என்பதை மீண்டும் திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார் விஜய். ஆனால், அ.தி.மு.க.,வை நேரடியாக எதுவும் விமர்சிக்கவில்லை.
அ.தி.மு.க.,வில் பல தலைவர்கள், த.வெ.க., தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுத்து வரும் நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்பதோடு விஜய் நிறுத்திக் கொண்டது, அரசியல் வட்டாரங்களில் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
விஜய் திட்டமிட்டே பேசியிருக்கிறார். அதாவது, அ.தி.மு.க., கூட்டணிக்கான கதவை மட்டும் திறந்தே வைத்திருப்பது இதிலிருந்து தெரிகிறது என்றும், அரசியல் வட்டாரங்களில் விஜய் பேச்சுக்கு விளக்கம் சொல்கின்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
கொள்கை எதிரிகள் மற்றும் பிளவு வாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது
நெல் மற்றும் கரும்பு நிலுவை தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்
திருச்சியில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்
நெய்வேலி என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும்
விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை, முத்தரப்பு பேச்சு வாயிலாக நிறைவேற்ற வேண்டும்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை துவங்க வேண்டும்
துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும்
அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.