கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது : வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி

4 ஆடி 2025 வெள்ளி 11:36 | பார்வைகள் : 130
தனிநபர்கள், சிறுதொழில் நிறுவனங்கள் பெறும் கடனின் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால், கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. புளோட்டிங் ரேட் எனப்படும் மாறும் வட்டி முறையில் பெறப்படும் கடனுக்கு இந்த சலுகை பொருந்தும்.
ரிசர்வ் வங்கி உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: தனிநபர்கள் பெறும் வர்த்தக நோக்கமில்லாத கடன்கள், வர்த்தக நோக்கில் தனிநபர்கள் பெறும் சிறுதொழில் கடன்களுக்கு ப்ரீ-பேமென்ட் எனப்படும் அசலை முன்கூட்டி திருப்பிச் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது.
* வரும் 2026 ஜன., 1 முதல் வழங்கப்படும் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு இது பொருந்தும்.
* பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும்.
* கடனின் அசல் நிலுவைத் தொகை முழுதுமாக திருப்பி செலுத்தப்பட்டாலும், கட்டணம் வசூலிக்கக் கூடாது. திருப்பிச் செலுத்துவதற்கான தொகைக்கு ஆதாரம் ஏதும் தேவையில்லை.
* கடன் பெற்ற நாளில் இருந்து லாக் - இன் பீரியட் எனப்படும் எந்த குறிப்பிட்ட கால கட்டுப்பாடும் இல்லாமல், இந்த சலுகையை வாடிக்கையாளர் பெறலாம்.
* சிறப்பு வட்டியில் வழங்கப்பட்ட கடன், நிலையான வட்டி மட்டும் அல்லாத பிக்சட் மற்றும் புளோட்டிங் இணைந்த வட்டியில் பெறப்பட்ட கடனுக்கும் இது பொருந்தும்.
* வாடிக்கையாளர் அல்லாமல், வங்கியே பகுதியளவு கடனை அடைக்க அழைப்பு விடுக்கும் சூழலிலும் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய உத்தரவால், கடனை திருப்பிச் செலுத்துவதிலும்; வேறிடத்துக்கு மாற்றிக் கொள்வதிலும், வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி முடிவெடுக்க முடியும்.
எம்.எஸ்.எம்.இ., வரவேற்பு
ஆர்.பி.ஐ.,யின் அறிவிப்புக்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நடவடிக்கைகள், கடன் வாங்குபவர்களை பாதுகாப்பதற்கும், நியாயமான கடனை உறுதி செய்வதற்கும், ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சிகளை இம்முடிவு பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளன.