பழைய வாகனங்கள் பறிமுதல் நிறுத்தி வைத்தது டில்லி அரசு

4 ஆடி 2025 வெள்ளி 10:36 | பார்வைகள் : 134
வாகன ஓட்டிகள், அரசியல் மற்றும் சமூக அமைப்பினரின் தொடர் எதிர்ப்பை அடுத்து, 10 ஆண்டுகள் பழைய வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை டில்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
டில்லியில் மாசுக் கட்டுப்பாடு அதிகரித்ததை அடுத்து, 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டது. அவ்வாறு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய, காற்று தர மேலாண்மை கமிஷன் உத்தரவிட்டது.
இது, கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி, தலைநகர் முழுதும் உள்ள 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகளில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், போலீசார், நகராட்சி அதிகாரிகள் குவிந்தனர்.
கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில், 200க்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து போராடவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக டில்லி அரசு நேற்று அறிவித்தது. இது தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, காற்று தர மேலாண்மை கமிஷன் தலைவருக்கு மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நேற்று கடிதம் எழுதினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பழைய வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக பெட்ரோல் நிலையங்களில் நிறுவப்பட்ட கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை. ஒலிபெருக்கிகளும் வேலை செய்யவில்லை. வாகனங்களை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளும் தற்போதைய சூழலில் இல்லை. பழைய வாகனங்களை கண்டுபிடிப்பது அடையாளம் காண ஒரு அமைப்பை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுவரை பறிமுதல் செய்யும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த கொள்கையை தொடர்வது குறித்து காற்று தர மேலாண்மை கமிஷனே முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.