Paristamil Navigation Paristamil advert login

மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி; தி.மு.க., ஆதரவு என தினகரன் காட்டம்

மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி; தி.மு.க., ஆதரவு என தினகரன் காட்டம்

3 ஆடி 2025 வியாழன் 08:30 | பார்வைகள் : 560


காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும், கர்நாடக அரசின் முயற்சியை, சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்பதோடு, அரசியல் ரீதியாகவும், முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகள் துவங்கி விட்டதாக, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகி உள்ளன. 'எங்களின் அனுமதியின்றி, எந்த கொம்பனாலும், காவிரியின் குறுக்கே, அணை கட்ட முடியாது' என, தி.மு.க., அரசு வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், மறுபுறம் மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கான, நிலம் கணக்கீட்டுப் பணிகளை நிறைவு செய்து, அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, கர்நாடக அரசு துவங்கி இருக்கிறது.

கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதியின்றி, எந்த ஒரு இடத்திலும், புதிய அணையை கட்ட முடியாது என உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக அறிவுறுத்தியது. அதன்பிறகும் சட்ட விரோதமாக, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என, கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை, கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப் பெற முடியாத தி.மு.க., அரசு, இதற்கு மேலும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காத்தால், அது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும், மாபெரும் அநீதி ஆகும்.

கர்நாடகா முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும், பெங்களூருவுக்கு ஓடோடி செல்லும் முதல்வர், தமிழகத்திற்கு வரும் கர்நாடகா துணை முதல்வரை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதல்வர், காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார். இக்கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்