Paristamil Navigation Paristamil advert login

தமிழகம் முழுதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., அதிரடி

தமிழகம் முழுதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., அதிரடி

3 ஆடி 2025 வியாழன் 06:30 | பார்வைகள் : 199


குற்ற வழக்குகள் விசாரணைக்காக, தமிழக காவல் துறையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அனைத்தையும் கலைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை என்ற பெயரில், கோவில் காவலாளியை தனிப்படை போலீசார் அடித்து கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கையை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் எடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27; கோவில் காவலாளி. நகை மற்றும் பணம் திருடியதாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை பிடித்து அடித்து, சித்ரவதை செய்ததில், அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், 'மாநிலம் முழுதும் எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் செயல்பட்டு வரும் தனிப்படை போலீசார், குற்ற வழக்கில் சிக்கும் நபர்கள் மற்றும் விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களை கடுமையாக தாக்குகின்றனர்.

'அப்படித்தான், துாத்துக்குடி மாவட்டத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோரை அடித்துக் கொன்றனர். தற்போது அஜித்குமாரும் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்' என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, எஸ்.பி.,க்கள், துணை கமிஷனர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் என, பல்வேறு நிலைகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

காவல் துறை துவங்கிய காலத்தில் இருந்தே தனிப்படைகள் அமைத்து, குற்ற வழக்குகளில் சிக்கும் நபர்கள் மற்றும் சந்தேக நபர்களிடம் விசாரிக்கும் நடைமுறைகள் உள்ளன.

தற்போதும் கூடுதல் டி.ஜி.பி.,க்கள் துவங்கி, எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் நிலையில் உள்ள அதிகாரிகளின் கீழ் தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.


அவ்வாறு அமைக்கப்படும் தனிப்படைகள் நிரந்தரமாக செயல்படுவது தான், பிரச்னைக்கு வழி வகுக்கிறது. தனிப்படை போலீசார், அடியாட்கள் போலத்தான் செயல்படுகின்றனர். அடித்து, சித்ரவதை செய்து, உண்மையை வரவழைப்பது தான் தனிப்படை போலீசாரின் விசாரணை பாணி.

குற்ற வழக்கில் சிக்கும் நபர்கள், சந்தேக நபர்களிடம் எப்படி விசாரிக்க வேண்டும்; அவர்களை அடிப்பது போல நடித்து, உண்மையை கறப்பது எப்படி என போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள தனிப்படை போலீசார், வசூல் வேட்டைக்கு தான் பயன்படுத்தப்படுகின்றனர்; சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்காமல், அதிகாரிகள் பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றும் அடியாட்களாகவே செயல்படுகின்றனர்.

இதனால், அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை உடனடியாக கலைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அது பற்றிய விபரங்களை, 24 மணி நேரத்திற்குள், டி.ஜி.பி., அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவு போலீசாரால், குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என்ற நிலை ஏற்படும்போது மட்டும், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்களின் அனுமதி பெற்று, தனிப்படைகளை அமைக்கலாம்.

சிறப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்கள் உத்தரவுகள் இன்றி, இனிமேல் தனிப்படைகளை அமைக்கக் கூடாது. அவர்களுக்கான விசாரணை பணிகள் முடிந்த உடனே தனிப்படையை கலைத்து விட வேண்டும் என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரவு 7:00 மணிக்கு மேல் காவல் நிலையங்களில் விசாரணை நடத்தக்கூடாது. கைது நடவடிக்கை இருந்தால், மாலை 6:00 மணிக்குள் அதற்கான நடைமுறைகளை முடித்துவிட வேண்டும்    குடி போதையில் தகராறு செய்யும் நபர்கள், பொது மக்கள் பிடித்து கொடுக்கும் நபர்களை, காவல் நிலையம் அழைத்து வரக்கூடாது. அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். அதன்பின், விசாரணையை துவக்கலாம்     விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர் பதற்றத்தில் இருக்கலாம் அல்லது அவரது உடலில் வேறு விதமான பிரச்னைகள் இருக்கலாம். மருத்துவமனையில் சேர்த்து, உடல் நலன் குறித்து அறிந்த பின் விசாரிக்க வேண்டும்    விசாரணையின்போது, காவல் நிலையத்தில் கண்டிப்பாக இன்ஸ்பெக்டர்கள் இருக்க வேண்டும்    தேவைப்பட்டால் மட்டுமே தனிப்படைகளை அமைக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை, டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு பல உத்தரவுகள், மாநிலம் முழுதும் உள்ள போலீசாருக்கு பறந்துள்ளன.


ஐ.ஜி., - எஸ்.பி.,க்களுக்கு 'டோஸ்'

கோவில் காவலாளி அஜித்குமார் இறப்புக்கு போலீசார் தான் காரணம் என தகவல் கிடைத்த உடனேயே, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அஜித்குமார் விவகாரம் தொடர்பாக, தனக்கு போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தரப்பட்ட தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக முதல்வர் கடிந்து கொண்டார். 
சட்டம் - ஒழுங்கு பிரச்னையை போலீஸ் அதிகாரிகள் கையாளும் முறையில் திருப்தி இல்லை என்றும் அவர் குறை கூறியிருக்கிறார்.அதை தொடர்ந்து, நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மண்டல ஐ.ஜி.,க்கள், சரக டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது, ரவுடிகள் ஒழிப்பு, குற்றங்கள் தடுப்பு, கைது எண்ணிக்கையை அதிகரிப்பது, தண்டனைகளை பெற்று தருவது தொடர்பாக சரமாரியாக கேள்விகள் எழுப்பிஉள்ளார். அவரின் பேச்சு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக இருந்துள்ளது. உளவு தகவல்கள் கிடைத்த அடுத்த வினாடியே, போலீஸ் அதிகாரிகள் செயல்படுவது இல்லை என்றும் 'டோஸ்' விட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்