Paristamil Navigation Paristamil advert login

காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப்பெறும் இலங்கை அரசாங்கம்

காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப்பெறும் இலங்கை அரசாங்கம்

27 வைகாசி 2025 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 445


வடக்கில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும்வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அந்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்து தருமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஊடாக சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபருக்கு அமைச்சின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 28.03.2025 வெளியிடப்பட்ட இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் மூலம் 1931ம் ஆண்டு 20ம் இலக்க காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இதுவரை 5616 வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, காணிகளின் உரிமைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

5617 தொடக்கம் 5623 வரையான 07 நிர்ணய அறிவிப்புகள் வட மாகாணத்தினை மையப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்டன. இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அளந்து தயாரிக்கப்பட்ட 07 இலங்கை நில அளவை கிராம வரைபடங்கள் தொடர்பாக, 07 நிர்ணய அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த அறிவிப்புகள் அனைத்தும் உரிய முறையில் குறித்த பிரதேச செயலகங்களின் ஊடாகவும், பத்திரிகை விளம்பரங்களின் ஊடாகவும் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுவரொட்டிகள் மூலமாகவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கூறிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்ட தீர்வுக்கான ஆரம்ப அறிவிப்புகள் தொடர்பாக சமூகத்தில் தவறான கருத்துக்கள் மற்றும் தவறான புரிதல்கள் எழுந்துள்ளமையினால் அதனை மீள பெற்றுக் கொள்ளுமாறு வட மாகாண அரசியல் தலைமைகள் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த அரசியல் தலைமைகள் அது தொடர்பில் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டதோடு, கௌரவ பிரதமரின் தலைமையில் குறித்த பிரதேச அரசியல் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் 2025.05.23ம் திகதி பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறித்த அரசியல் தலைமைகள் சுட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வு செயல்முறை தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக மக்கள் பிரதிநிதிகளின் உடன்பாட்டைப் பெற்று இந்த விடயத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

குறித்த ஒப்புதலைப் பெற்றதன் பின்னர் இந்த காணி நிர்ணய நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அவசியமான விடயங்களை முறையாக தயாரித்து, அவற்றை அந்த பகுதி அரசியல் தலைமைகளை முறையாக அணுகி இதனை ஆரம்பிக்க வேண்டும் என்பதே கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் நிலைப்பாடாகும்.

அந்த சூழலை உருவாக்குவதற்காக குறித்த ஒப்புதலைப் பெற்றதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள 2025.03.28ம் திகதிய 2430ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினை அகற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. அது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்