ஹமாஸ் தலைமைக்கு எதிராக போராளிகள் அதிருப்தி

27 வைகாசி 2025 செவ்வாய் 12:47 | பார்வைகள் : 843
ஹமாஸ் அமைப்பின் போராளிகளுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாததால், அவர்கள் தங்கள் தலைமைக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போர் காரணமாக ஹமாஸின் நிதி ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அமைப்பு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
2023-க்கு முன்பு ஹமாஸ் அமைப்பில் சுமார் 30,000 போராளிகள் இருந்தனர். ஆனால், இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாலும், ஏராளமானோர் அமைப்பை விட்டு விலகியதாலும் தற்போது 15,000 பேர் மட்டுமே உள்ளனர்.
ஹமாஸ் போராளிகளுக்கு அவர்களின் பதவிக்கு ஏற்ப இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
காசா நிர்வாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் இதே அளவு ஊதியம் கிடைத்தது.
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் காசாவின் பொருளாதாரம் முழுமையாகச் சீர்குலைந்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான், கத்தார், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து கணிசமான நிதியுதவி கிடைத்து வந்தது.
ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் நடவடிக்கைகளால் இந்த நிதியுதவிகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நிதியுதவி தடைபட்டதால், ஹமாஸ் போராளிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
மூன்று மாதங்களாக ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை என்று மத்திய கிழக்கு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடியால் புதியவர்களை சேர்க்கவோ அல்லது ஆயுதங்களை வாங்கவோ ஹமாஸால் முடியவில்லை. மேலும் மாதக்கணக்கில் ஊதியம் கிடைக்காத நிலையில், ஹமாஸ் போராளிகள் தங்கள் தலைமைக்கு எதிராக அதிருப்தி அடைந்துள்ளனர்.