ஜூன் 19 ராஜ்யசபா தேர்தல்... அன்புமணி, வைகோ, கமல் ஆசை நிறைவேறுமா?

27 வைகாசி 2025 செவ்வாய் 10:12 | பார்வைகள் : 518
தமிழகத்தில், ஜூலை 24ல் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 19ல் தேர்தல் நடக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தற்போது எம்.பி.,யாக உள்ள பா.ம.க., தலைவர் அன்புமணி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, முதல்முறை எம்.பி.,யாக விருப்பப்படும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஆகியோரின் ஆசை நிறைவேறுமா என்பது, அடுத்த மாதம் தெரியும்.
ராஜ்யசபாவில் தமிழகத்திற்கு, 18 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், தலா ஆறு இடங்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுழற்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. யாராவது ராஜினாமா செய்தால் அல்லது மரணம் அடைந்தால், அந்த இடத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்படும். தி.மு.க.,வின் அப்துல்லா, வில்சன், சண்முகம், அ.தி.மு.க.,வின் சந்திரசேகரன், பா.ம.க.,வின் அன்புமணி, ம.தி.மு.க.,வின் வைகோ ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிகிறது.
யாருக்கு பலன்?
அதற்கு முன் அந்த இடங்களுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தாக வேண்டும். அதற்கான தேர்தல் ஜூன் 19ல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. தமிழகத்திலிருந்து ஒருவர் ராஜ்யசபா உறுப்பினராவதற்கு, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. தி.மு.க., கூட்டணியில், 159 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அக்கட்சிக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர்.
அ.தி.மு.க., கூட்டணியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரையும், பா.ஜ.,வின் நான்கு பேரையும் சேர்த்தால், 70 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்த கூட்டணிக்கு, இரு எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஓட்டுப்பதிவு இல்லாமலே முடிவு அறிவிக்க இயலும்.
தி.மு.க.,விடம், 23 ஓட்டுகள் உபரியாக இருப்பதால், ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது. கட்சி மாறி ஓட்டு போடுபவர்களால் இந்த வாய்ப்பு பிரகாசமாகும். அப்படி நிறுத்தப்பட்டால் ஓட்டுப்பதிவு நடக்கும். அதில், பன்னீர்செல்வம் கோஷ்டி தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டால், அல்லது ஓட்டு போடாமல் புறக்கணித்தால், அ.தி.மு.க.,வுக்கு சிக்கல் உண்டாகும்.
அப்போது, பா.ம.க., ஆதரவு தேவைப்படும். அதை விட, அன்புமணிக்கே அந்த வாய்ப்பை கொடுத்தால், அ.தி.மு.க., கூட்டணியில் சேர பா.ம.க., சம்மதிக்கும். அதற்கு பழனிசாமி தயாரா என்று தெரியவில்லை.
ஓட்டுப்பதிவு நடந்தால், எம்.எல்.ஏ.,க்கள் இரண்டாவது விருப்ப ஓட்டு போடலாம். அதில், யார் அதிக ஓட்டு பெறுகின்றனரோ, அவர் வெற்றி பெறுவார். பெரும்பாலும், இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சியே இதுவரை பலன் அடைந்துள்ளது.
கடும் போட்டி
ராஜ்யசபாவில் இப்போது, அ.தி.மு.க.,வுக்கு தர்மர், சி.வி.சண்முகம், தம்பிதுரை, சந்திரசேகர்ஆகிய நான்கு எம்.பி.,க்கள் உள்ளனர். தர்மர் மட்டும் பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார். லோக்சபாவில், அ.தி.மு.க.,வுக்கு ஒரு எம்.பி., கூட இல்லை. எனவே, தற்போது வாய்ப்புள்ள இரண்டு இடங்களிலும் ஜெயிக்க வேண்டும் என, பழனிசாமி விரும்புகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், மா.பா.பாண்டியராஜன், கோகுல இந்திரா, இப்போதைய எம்.பி., சந்திரசேகர் ஆகியோர், ராஜ்யசபா எம்.பி.,யாக முயற்சி செய்கின்றனர். புதுமுகம் யாரையாவது பழனிசாமி நிறுத்தவும் வாய்ப்பு உண்டு என்கின்றனர்.
எதிர்பார்ப்பில் 3 கட்சிகள்
லோக்சபா தேர்தலின் போது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக, அ.தி.மு.க., உறுதி அளித்தது என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். இதை பழனிசாமி வெளிப்படையாக மறுத்தாலும், தே.மு.தி.க., நம்பிக்கை இழக்கவில்லை. கடந்த முறை அ.தி.மு.க., ஆதரவுடன், ராஜ்யசபா எம்.பி.,யான அன்புமணி, அடுத்த ஆண்டு வரும் சட்டசபை தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து, தனக்கு மீண்டும் அ.தி.மு.க., வாய்ப்பு வழங்கும்; அதற்கு பா.ஜ., உதவும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
தி.மு.க., கூட்டணியிலும் போட்டி இருக்கிறது. வைகோ, மீண்டும் எம்.பி.,யாக விரும்புகிறார். லோக்சபா தேர்தல் ஒப்பந்தப்படி, நடிகர் கமலும் எம்.பி.,யாக விரும்புகிறார். ஆனால், மூன்று எம்.பி., பதவிகளையும் இழக்க தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை. எனவே, சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
தேர்தல் அட்டவணை
ஜூன் 2 - மனு தாக்கல் துவக்கம்ஜூன் 9 மனு தாக்கல் நிறைவுஜூன் 10 மனுக்கள் பரிசீலனைஜூன் 12 மனு திரும்பப்பெற கடைசி நாள்ஜூன் 19 ஓட்டுப்பதிவு, எண்ணிக்கை
சட்டசபையில் கட்சிகளின் பலம்
தி.மு.க., - 134அ.தி.மு.க., -66காங்கிரஸ் - 17பா.ம.க., - 5பா.ஜ., 4வி.சி., 4மார்க்சிஸ்ட் 2இந்திய கம்யூ. 2