மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

27 வைகாசி 2025 செவ்வாய் 09:12 | பார்வைகள் : 641
மதுரையில், ஜூன் 22ம் தேதி நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு, ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில், ஆடு, கோழி பலியிட்டு விருந்து வைக்க, சிலர் முயன்றதை தொடர்ந்து, அங்கு பிரச்னை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களை திரட்டி, ஹிந்து முன்னணி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை, ஹிந்து முன்னணி ஜூன் 22ம் தேதி நடத்துகிறது.
இதில் பங்கேற்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் வாசன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகை தேவயானி உள்ளிட்டோருக்கு, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், இளங்கோவன் ஆகியோர் சீமானை சந்தித்து, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.
நேற்று சென்னை வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பக்தவத்சலம், மனோகர் நேரில் சந்தித்து, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.