பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கு மாலத்தீவு ஆதரவு

27 வைகாசி 2025 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 830
இரு தரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தலைமையிலான குழு வந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தெற்காசிய நாடான மாலத்தீவு அதிபராக, 2023 நவம்பரில் பதவியேற்றார் சீன ஆதரவாளரான முகமது முய்சு. இந்திய சுற்றுலா குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, மாலத்தீவுக்கான சுற்றுலா பயண திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டனர்.
இதனால், சுற்றுலாவே முக்கிய தொழிலாக உள்ள மாலத்தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு அக்டோபரில் இந்தியா வந்த முகமது முய்சு, இந்தியாவுடனான உறவை மீண்டும் தொடர விருப்பம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பொருளாதார மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பான விரிவான திட்டம் உருவாக்கப்பட்டது. இவற்றை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தலைமையிலான குழு, மூன்று நாள் பயணமாக டில்லிக்கு நேற்று வந்தது.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அப்துல்லா கலீல் சந்தித்து பேசினார். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.