இலங்கையில் சிக்குன்குனியா பரவல் தீவிரம் – பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா

26 வைகாசி 2025 திங்கள் 13:47 | பார்வைகள் : 890
இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மே 23ஆம் திகதி தனது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள பிரித்தானியா அரசாங்கம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் பதிவாகாத அளவில் இலங்கையில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பதிவொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நோய் பரவலுக்குக் காரணமான வைரஸ் திரிபுகள் குறித்து தமது குழுவினர் முழு மரபணு பரிசோதனை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.