Paristamil Navigation Paristamil advert login

வந்தாச்சு ராஜ்யசபா தேர்தல்; முட்டி மோதும் குட்டிக்கட்சிகள்!

வந்தாச்சு ராஜ்யசபா தேர்தல்; முட்டி மோதும் குட்டிக்கட்சிகள்!

26 வைகாசி 2025 திங்கள் 15:14 | பார்வைகள் : 785


தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த வில்சன், எம்.சண்முகம், எம்.எம் அப்துல்லா, ம.தி.மு.க.,வின் வைகோ, அ.தி.மு.க.,வின் சந்திரசேகரன், பா.ம.க.,வின் அன்புமணி ஆகிய ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல்; ஜூன் 2ம் தேதி

வேட்புமனு கடைசி நாள் ; ஜூன் 9ம் தேதி

வேட்புமனு பரிசீலனை; ஜூன் 10ம் தேதி

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ; ஜூன் 12ம் தேதி

தேர்தல் ; ஜூன் 19ம் தேதி (அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்)

யார் யாருக்கு?


தமிழகத்தில் தற்போதைய சட்டசபை தொகுதிகளின் நிலவரத்தை பொறுத்து தி.மு.க., கூட்டணிக்கு 4 ராஜ்ய சபா இடங்களும், அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரையில், ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சி தலைவர் கமலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது எம்.பி.,யாக இருக்கும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க., சார்பில் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் வில்சனுக்கு மட்டும் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மற்ற இருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அ.தி.மு.க., கூட்டணியில் ராஜ்யசபா தேர்தல் வாய்ப்பு தருவதாக, கடந்த லோக்சபா தேர்தலின்போது தே.மு.தி.க.,வுக்கு வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி தங்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று தே.மு.தி.க.,வினர் கூறி வருகின்றனர்.

ஆனால், அப்படி எதுவும் உத்தரவாதம் தரவில்லை என்று அ.தி.மு.க., தரப்பில் கூறி வருகின்றனர். இந்த விவகாரமும் வரும் நாட்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, கடந்த முறை அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு பா.ம.க., அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு மீண்டும் பா.ம.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., முயற்சி மேற்கொண்டுள்ளது. கூட்டணியில் சேருவதற்கான துருப்புச்சீட்டாக, ராஜ்யசபா சீட்டை பா.ம.க., கேட்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க.,வில் இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு, எந்த பதவியிலும் இல்லாத மூத்த நிர்வாகிகள் பலர் முயற்சித்து வருகின்றனர்.

இதனால் வரும் நாட்களில் இரண்டு பிரதான கூட்டணிகளிலும், ராஜ்யசபா சீட் தொடர்பான பேரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்