தி.மு.க., இரட்டை வேடம்; கருணாநிதி, ஸ்டாலினை ஒப்பிட்டு பவன் கல்யாண் பேச்சு

26 வைகாசி 2025 திங்கள் 14:14 | பார்வைகள் : 1167
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது'' என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் பா.ஜ., சார்பில் நடந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது.
ஓட்டுப்பதிவு இயந்திரம்
சிலர் இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழகம் திருவள்ளுவர், பாரதியார், எம்.ஜி.ஆர் வாழ்ந்த பூமி. எதிர்க்கட்சிகள் ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து தங்களுக்கு சாதகமான கருத்துகளை கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தோற்றுவிட்டால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சூடு வைத்துவிட்டதாக கூறுகின்றனர். மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம் என எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர்.
இரட்டை வேடம்
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்து குறிப்பிட்டுள்ளார். இப்போது தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. நான் தமிழகத்தை விட்டு போனாலும், தமிழகம் என்னை விட்டுவிடவில்லை.
தேர்தல் செலவுகள்
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மூலம் தேர்தல் செலவுகளை குறைக்க முடியும். நாடு எப்போதும் தேர்தல் பணிகளில் முடங்கி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பொது மக்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும். தொடர்ந்து தேர்தல்களினால் அதிகாரிகள், போலீசார் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.