எல்லாம் அமலாக்கத்துறை படுத்தும் பாடு; முதல்வர் டில்லி பயணம் பற்றி விஜய் விமர்சனம்

26 வைகாசி 2025 திங்கள் 04:11 | பார்வைகள் : 294
முதல்வர் டில்லி பயணத்துக்கு அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு தான் காரணம் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் தி.மு.க. தலைமையின் குடும்பு உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடையையும் வாங்கியது.
எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால் எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நிதி ஆயோக் கூட்டம்.
சென்ற ஆண்டு இதே நிடி ஆயோக் கூட்டம் டில்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள். இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
அப்படியிருக்க. இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம். அமலாக்கத்துறை படுத்தும் பாடுதான்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.