Paristamil Navigation Paristamil advert login

பணம் கொடுக்குது மத்திய அரசு; வேண்டாம் என்கிறது தமிழகம்: பிரதமர் திட்டத்தில் வீடுகள் கட்ட மறுப்பு

பணம் கொடுக்குது மத்திய அரசு; வேண்டாம் என்கிறது தமிழகம்: பிரதமர் திட்டத்தில் வீடுகள் கட்ட மறுப்பு

13 ஆனி 2025 வெள்ளி 14:05 | பார்வைகள் : 3838


பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில், தமிழகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில், 6,600 வீடுகளை குறைக்கவும், 3,324 வீடுகள் கட்டுவதை ரத்து செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில், பிரதமரின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏழை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பு அடிப்படையில் வீடுகள் கட்டி கொடுப்பது; நிலம் வைத்துள்ளவர்கள் வீடு கட்ட நிதி வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கம்.

ஒப்புதல்


தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்துக்கு, 5,264 திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதில், 6.70 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில், 6.05 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய வீடுகள் கட்டும் பணி நிலுவையில் உள்ளது.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டம், சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த மத்திய அரசின் ஆய்வு கூட்டம், சமீபத்தில் நடந்தது.

அந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், 6,600 வீடுகள் குறைப்பு, 3,324 வீடுகள் கட்டுவதை கைவிடுவது தொடர்பான பரிந்துரைகளுக்கு, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வீடுகள் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான ஆறு திட்டங்களில், 142 வீடுகள், பயனாளிகள் வீடு கட்ட மானியம் வழங்குவதற்கான, 1,254 திட்டங்களில், 6,458 வீடுகள் என மொத்தம், 6,600 வீடுகள் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்பட்டது.

பரிந்துரை


இதேபோன்று, ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுப்பது தொடர்பான நான்கு திட்டங்களில், 3,264 வீடுகள், பயனாளிகள் வீடு கட்ட மானியம் வழங்குவதில், 14 திட்டங்களில், 60 வீடுகள் என மொத்தம், 3,324 வீடுகள் கட்டுவதை கைவிட, தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு, மத்திய அரசின் உயர்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் மக்கள் விரும்பாததும், நிலம் சரியான முறையில் அமையவில்லை என்பதும், இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாய்ப்பை மறுப்பது ஏன்?

தமிழகத்தில் ஆண்டுதோறும் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், எண்ணிக்கை குறைப்பு மற்றும் ரத்து தொடர்பாக, தமிழக அரசு பரிந்துரைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திட்டங்களில், மத்திய அரசிடம் நிதி கிடைக்கவில்லை என்று கூறும் தமிழக அரசு, மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிதியை மறுப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026