பாகிஸ்தான் மீது 25 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய இந்தியா

8 வைகாசி 2025 வியாழன் 13:27 | பார்வைகள் : 603
பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று (மே.8) காலையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. இங்கு குண்டு வெடித்ததாக கூறப்பட்டாலும், ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை இந்தியா நடத்தியிருக்கலாம் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிப்பதற்காக 25 ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே புகைமூட்டம்
லாகூரில் உள்ள கோபால் நகர், நசிராபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வால்டன் சாலையில் பல குண்டுவெடிப்பு சப்தம் கேட்டன. மக்கள் பலர் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். நகரில் ஆங்காங்கே புகைமூட்டம் காணப்படுகிறது.
பாகிஸ்தானில் ரெட் அலர்ட்
இந்தியாவுடனான மோதல் பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் இந்த குண்டுவெடிப்பால் , பாகிஸ்தானில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையம் மூடல்
குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து லாகூர் உள்ளிட்ட எல்லையோர விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அச்சம்
பாகிஸ்தானுக்கு பதிலடியாக அந்த நாட்டில் பல இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாலும், வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிக்கப்பட்டதாலும், இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நிலவுகிறது.
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 வீரர்கள் பலி
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு போராளிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 12 வீரர்கள் பலியாகினர்.