மீண்டும் பலத்த அடி; எல்லையில் நள்ளிரவில் வாலாட்டிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி

8 வைகாசி 2025 வியாழன் 06:59 | பார்வைகள் : 300
ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி அருகே நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியரை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன் சுட்டுக் கொன்றனர். நாடு முழுதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியது இந்த சம்பவம். பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு நமக்கு தொல்லை தந்து வந்த பாகிஸ்தானை நேற்று ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது இந்தியா.
ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் நடத்திய அதிகாலை தாக்குதலில், அங்குள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. எல்லைக்கோட்டை தாண்டாமல், ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா நடத்தி முடித்த துல்லிய தாக்குதல், உலக நாடுகளை அசர வைத்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா, பாரமுல்லா, உரி மற்றும் அக்னூர் பகுதிகளில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.
சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி தாக்க முயற்சித்தது. அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையில் மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வாலாட்ட முயற்சி செய்தால், அவர்களுக்கு இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.