Paristamil Navigation Paristamil advert login

25 வீத கோட்டா இருந்தும் அரசியலில் பெண்கள் படும்பாடு !

25 வீத கோட்டா இருந்தும் அரசியலில் பெண்கள் படும்பாடு !

6 வைகாசி 2025 செவ்வாய் 12:12 | பார்வைகள் : 113


வீ.பிரியதர்சன்
இலங்கையில், அரசியலைப் பொறுத்தவரையில் ஆண்களே கோலோச்சிவரும் நிலையில், பெண்களும் இதற்கு நிகரானவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். உலகிலேயே முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடாக இலங்கை உள்ளபோதும், இலங்கை அரசியலில் பெண்கள் படும் கஷ்டம் எவரும் அறிந்ததில்லை.

ஏனைய துறைகளைக் காட்டிலும் அரசியலில் பெண்களுக்கான சவால்கள் அதிகம். எனினும் பெண்கள் அரசியல் பயணத்தில் ஆண்களுக்கு இணையாக தற்போது போட்டிபோடும் நிலை காணப்படுகின்றது.

அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு சமூக, குடும்ப வட்டத்தில் பல கடிவாளங்களும் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன.

சமூகத்தில் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களும் அவதூறு கருத்துக்களும் அவர்களின் அரசியல் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயுதங்களாக பயன்படுத்தப்படுவதுடன் தற்காலத்தில் தேர்தல் மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரப்பப்படுவதால் அவர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகின்றது.

ஹலிஸ்ரா டலிமா 
“ பொதுவாக தமிழ் மக்களிடையே சட்டத்தரணி, வைத்தியர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் போல ஆண்கள் தான் சட்டத்தரணிகள் என்றும் வைத்தியர்கள் என்றும் ஆழமான கருத்து காணப்படும். ஆனால் இன்றைய நவீன வளர்ச்சியின் பிரகாரம் தமிழ் மக்கள் மத்தியில் சற்று ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.  பெண் வைத்தியர்கள், சட்டத்தரணிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனாலும் அரசியல் களத்தில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

பெண்களுக்கு அரசியல் களத்தில் கூட தைரியமாக முன் வந்து காலடி எடுத்து வைக்க முடியவில்லை. அரசியல்வாதியாக, பெண் பிரதிநிதியாக பெண்கள் பலர் முன்வராமைக்கு பல காரணங்கள் இருந்தாலும் சமூகமே பெரும் காரணமாக உள்ளது. பெண்களுக்காக குரல் கொடுக்க முன்வந்த பெண் அரசியல்வாதிகள் தனியாகவே போராடுகின்றார்கள்.

சமூகம் ஏனைய துறைகளைப்போன்று அரசியல்துறையையும் ஒரு சாதாரண துறையாக ஏற்க மறுக்கின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல பெண்கள் போட்டியிட முன்வந்த போதிலும் சமூகம் அதை ஏற்கவோ அல்லது ஆதரவுகொடுக்கவோ தீவிரமாக முன்வரவில்லை என்பதே உண்மை” என்கிறார் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஹலிஸ்ரா டலிமா.

கடந்த 07 வருடங்களுக்கு மேலாக கொழும்பு மாவட்டத்தில் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் காயத்ரி விக்கிரமசிங்க கூறுகையில், “ பெண் என்ற ரீதியில் நானும் பல்வேறுபட்ட அவதூறுப் பேச்சுக்களை எனது அரசியல் வாழ்க்கையில் எதிர்கொண்டுள்ளேன். எனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அப்பா என்னை அரசியலுக்குள் தள்ளிவிட்டுவிட்டார் என சக அரசியல்வாதிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இவ்வாறு என்னை ஒரு இளக்காரமாகத் தான் பார்த்தார்கள்.

ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு நான் சென்று கலந்துகொண்ட நிலையில் அங்கும் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. இதனால் எனது கட்சியில் இருந்த சக நண்பர்கள் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்தனர். நீங்கள் தமிழ் பெண், திருமணம் செய்யாமல் உள்ளீர்கள் எதிர்காலத்தில் திருமணம் முடித்த பின்னர் உங்களது கணவர் அரசியலில் இருந்து விலகச் சொன்னால் நீங்கள் அரசியலில் இருந்து விலக நேரிடும் என்று கட்சியின் அமைப்பாளர் என்னிடம் கூறினார். அரசியலில் நுழையும் பெண்களுக்கு இவ்வாறு  சொல்லி அவர்களை அங்கிருந்து திசை திருப்புவதே இவர்களின் நோக்கமாக காணப்பட்டது.” என்றார்.

“ உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிகமான பெண்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களிலும் அதிகமான பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர். பெண்களுக்கு எதிரான போலிப்பிரச்சாரங்ளும் அவதூறு பேச்சுக்களும் பல்வேறு வழிகளிலும் பரப்பப்படுகின்றன. பெண்கள் என்ற ரீதியில் அவர்கள் பல்வேறு சிக்கல்களையும் அவதூறுகளையும் சந்திப்பதுடன் மனோநிலை ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அரசியலிலும் தேர்தல்களத்திலும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்ற பெண்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.” என வெரிட்டே மீடியா ரிசேர்ச்சின் தலைமை அதிகாரி தீபாஞ்சலி அபேவர்தன கூறுகிறார்.

இலங்கையில் 56 வீதமானமானோர் பெண் வாக்காளர்களாக காணப்படுகின்றனர். அவர்களது பிரதிநிதிகளாவும் அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்காகவும்  பெண்கள் அரசியலில் ஈடுபடுவது சிறப்பானது. நாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரித்துள்ளன.

அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறுவதற்கு பெண் பிரதிநிதிகள் தெரிவாவது இன்றியமையாதது. சமூகத்திற்குள்ளும் கட்சிக்குள்ளும் இருக்கும் மனநிலை அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் பெண்களை இழுத்து விழுத்தும் அளவுக்கு மோசமானதாக இருக்கிறது. அதுவும் அரசியல் களத்தில் உள்ள பெண்களின் தன்னம்பிக்கையை உடைப்பதற்காக தனிப்பட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு வடிவம் தான் பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தளங்களூடான போலிப் பிரச்சாரங்களும் அவதூறு பேச்சுக்களும் ஆகும்.

“ அரசியலில் பெண்கள் இறங்கியவுடன் உற்றார், உறவினர்கள் கூட அரசியல் ஒரு சாக்கடை, இது எல்லாம் பெண்களுக்கு எதற்கு என்ற கேள்விகளை எழுப்பி மனதளவில் குழப்பத்தை ஏற்படுத்தினர். ஒரு பெண் அரசியலில் நுழைகின்றாள் என்றால் தனது வாழ்க்கையை மறந்துவிட்டுத்தான் நுழைய வேண்டும் என எண்ணத் தோன்றுகின்றது. அந்தப் பெண்ணைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் பல்வேறு விதமான பதிவுகளை இட்டு, அதாவது அவளது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

அது அந்தப் பெண்ணை மனரீதியாக பாதித்துவிடும் என இந்த சமூகம் நம்புகின்றது. ஒரு பெண்ணாக நான் அரசியலுக்குள் நுழையும் போது பலர் ஆணாதிக்கத்தோடு இருந்ததை உணர்ந்தேன். ஒரு பெண்தானே இவளால் என்ன செய்ய முடியும் என்று கேளிக்கையாக பார்த்தனர். பெண்ணான உங்களுக்கு எதற்கு வேண்டாத வேலை, திருமணம் முடித்து, பிள்ளைகளைப் பெற்று வளர்த்தெடுப்பதை விடுத்து இதுவெல்லாம் ஏன் என்றார்கள். இன்றும் பலர் உன்னுடைய கணவன் அல்லது காதலன் மற்றும் அவரது குடும்பம் இதனை ஏற்றுக்கொண்டார்களா ? அநியாயமாக வாழ்க்கையை இழந்துவிடுவாய் என்கிறார்கள். நான் ஒரு தனிப்பட்ட பெண் எனது இலக்குகள் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. பெண் என்றதால் தான் இவ்வாறு முடக்க முயன்றார்கள்” என்கிறார் ஹலிஸ்ரா டலிமா.

காயத்ரி விக்கிரமசிங்க
“ சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி எனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பினார்கள். எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தினார்கள். என்னை படம் எடுத்து அந்த போலிக்கணக்குகளில் பதிவேற்றுவது, எனது சமூக ஊடகப்பக்கத்தில் உள்ள படங்களை திருடி அதனை எடிட் செய்து அவதூறு பரப்புவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அரசியலுக்குள் இளம் பெண்கள் நுழைவது குறைவு, குறிப்பாக கொழும்பு மாநகர சபையை எடுத்துக்கொண்டால் அனைத்து பெண்களும் திருமணமானவர்களும் வயதானவர்களும் கணவரின் ஒத்துழைப்புடன் வந்தவர்களும் தான் உள்ளனர். அப்படி ஒரு இளம் பெண் அரசிலுக்குள் வந்தால் அந்தப் பெண் ஒரு மோசமான பெண்ணாக இருப்பார் என்ற மனநிலை தான் சமூகத்தில் காணப்படுகின்றது.

எனக்கும் இந்த நிலையேற்பட்டது. ஆனாலும் நான் எடுத்த முடிவை மாற்றாமைக்கு காரணம், என்னைப் பார்த்து அரசியலுக்குள் நுழைய ஆர்வமாக இருக்கும் இளம் பெண்களுக்கு நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பது. பலர் வாய்மூலமான அவதூறு பரப்புதல்களை மேற்கொள்வார்கள், என்னுடைய கட்சி மட்டத்தில் பழகுபவர்கள் தான் இவ்வாறு செய்தார்கள். என்னுடன் பழகும் ஒரு அக்கா என்னுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். நான் சாக்கடையில் போய் விழுந்துவிட்டேன் என்றும் என்னுடைய பெயர் கெட்டுப்போகப்போகுது. உன்னுடன் பழகினால் எனது பெயருக்கு இழுக்கு ஏற்படப்போகுது என்று தெரிவித்து என்னை ஒதுக்கிவிட்டுவிட்டார்” என்று கூறினார் காயத்ரி விக்கிரமசிங்க .

“ அரசியலில் ஈடுபடும் பெண்கள் டிஜிட்டல் வெளியில் சைபர் வழியான மிரட்டல்களுக்கு (cyber bullying) உள்ளாகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பெண்களுக்கு 25 வீதமான கோட்டா முறை வழங்கப்பட்டது. இதன் பின்னர் நாம் இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் பெண்கள் சைபர் வழியான மிரட்டல்களுக்கு (cyber bullying) ஆளாவது குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்தோம். இந்த ஆய்வின் படி 2018 ஆம் ஆண்டிலிருந்து சைபர் வழியான மிரட்டல்களுக்கு (cyber bullying) பெண்கள் முகங்கொடுப்பது அதிகரித்துள்ளது. இது தற்போது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களின் அதிகரிப்புடன் பார்க்கும் போது பெண்களுக்கு எதிராக  சைபர் வழியான மிரட்டல்கள் (cyber bullying) அதிகரித்துள்ளன.

கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ளதால், சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ளமையும் இதற்கு காரணமாக அமைகின்றது. அரசியலில் ஈடுபடும் பெண்களின் சுயமரியாதைகளை இழிவுக்குள்ளாக்கும் நிலையில், சமூக ஊடகங்களில் போலிப்பிரச்சாரங்களும் அவதூறுகளும் பரப்பப்படுகின்றன. அவர்களின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகின்றது. ஆண்களை விட பெண்களால் எதுவும் செய்யமுடியாது என்ற ரீதியில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு பல அவதூறுகளும் போலிப் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் அரசியலில் ஈடுபட ஆர்வமாகவுள்ள பெண்களும் இவ்வாறான செயற்பாட்டால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்” என்கிறார் வெரிட்டே மீடியா ரிசேர்ச்சின் தலைமை அதிகாரி தீபாஞ்சலி அபேவர்தன.

2020 மற்றும் 2024 இல்  நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, தொடர்ச்சியாக வட, கிழக்கிலிருந்து பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை. எனினும் கடந்த  வருடம் இடம்பெற்ற 17 ஆவது பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதிலுமிருந்து 21 பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இலங்கை வரலாற்றில் அதிக பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்த சந்தர்ப்பமாக இது பதிவாகியிருந்தது.

“ பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடக பக்கங்களில் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து பெண்ணான எனக்கு எதிராக பல்வேறு கட்டுக்கதைகளை பரப்பிக்கொண்டே இருந்தது சமூகம்.
பலர் பொறாமையின் நிமித்தம் வாக்களிக்காமல் விட்டுவிட்டனர், இவள் ஒரு பெண் இவளுக்கு கீழ் நாம் இருப்பதா என்ற நிலையைக் கூட உணர்த்தினார்கள். பல அலுவலகங்களில் வேலை செய்யும் உயர் அதிகாரிகளது மனப்பாக்கும் அவர்களுடைய நடத்தைகளும் அதிகாரத் தொனியை உணர்த்தியது. கட்சியில் போட்டியிட்ட சக ஆண் வேட்பாளர்கள் கூட பெண் வேட்பாளர் என்பதால் பணத்தைக் கொடுத்து நான் தேர்தலில் வெற்றிபெறும் நிலையை அமைதியாக்க முயற்சித்தார்கள், முடியாத பட்சத்தில் பல ஆண்களோடு இணைந்து கட்சி என்ற பெயரில் அவர்களுக்கு கீழ் தான் நான் இயங்க வேண்டும் என்று பெண் அடிமைத்தனத்தை நிலைநாட்டினர். ஒரு பெண்ணை மனதளவில் காயப்படுதினால் அவளை வீழ்த்தலாம் எனத் தெரிந்து பல்வேறு விதமான கட்டுக்கதைகளை, புனையப்பட்ட போலிப் பிரச்சாரங்களை, அவதூறுகளை மக்கள் மத்தியில் பரப்பினர்.

இதனால் சமூக ஊடகங்களிலும் ஏனைய வழிகளிலும் சம்பந்தமே இல்லாத நபர்கள் கூட தேர்தல் காலத்தில் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்து அவதூறுகளை பரப்பினர். இவற்றையெல்லாம் செய்கின்றபோது பெண்கள் அரசியலில் நுழைவதை தடுக்கமுடியும் என்பதை அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே இன்றும் இலங்கையில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது ” என்கிறார் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஹலிஸ்ரா டலிமா.

“ அரசியலில் பெண்கள் போட்டியிடுவதற்கு 25 வீத கோட்டா உள்ளது. அரசியல் படித்துள்ளேன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். என்ற நிலையில் நான் இருந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் நான் அரசியல் செய்கின்றேன். இதனால் எனக்கு அரசியலில் கட்சியை தாண்டி எனக்கு வரவேற்புள்ளது. என்னை குத்துவதற்கு மாற்றுக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் கத்தியையை துக்கிக்கொண்டு வந்தார். அதேபோன்று நான் மக்களுக்கு சேவை செய்யும் போது மாற்றுக் கட்சிக்கார்கள் வந்து சத்தமிட்டு கூப்பாடுபோட்டு குழுப்பினர்.

சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக பலர் பல்வேறு கட்டுக்கதைகளையும் அவதூறு பேச்சுக்களையும் பரப்பினர். மிரட்டும் வகையில் செய்திகளை அனுப்புவார்கள். 25 வீத கோட்டாவின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்குள் நுழைந்த போதும், அவர்களால் மக்களுக்கு எந்தவித சேவைகளும் இடம்பெறுவதாக தெரியவில்லை. அரசியலுக்குள் நுழைந்து அரட்டையடிக்கும் பெண்களே அதிகமாக உள்ளனர்.  இதற்கு காணரம் கோட்டாவை நிரப்புவதற்காக கட்சிகளினால் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட பெண்களே இவ்வாறானவர்கள்.  என்னுடன் அரசியல் செய்யும் பெண்களே என்னைப் பற்றி அவதூறுகளை பரப்பினர். ஏனெனில் அவர்களுக்கு பெறாமையும் எரிச்சலும் தான் காரணமாக இருந்தது. ஆனால் இவ்வாறானவர்கள் என்னுடன் நன்றாக சிரித்து கதைப்பார்கள். பின்னர் புறங்கூறுவார்கள். அலுவலகத்தில் பெண்கள் என்றால் பலர் இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள்.

நானும் பல காலமாக சிரித்து அமைதியாக இருந்தேன். ஆனால் என்னால் அவ்வாறு நீண்ட காலம் இருக்க முடியாது போனது. இதனால் நான் எதிர்த்துப் பேச ஆரம்பித்தேன். அதனால் நான் சவால்களை எதிர்கொண்டேன். இவ்வாறு என்னுடன் அரசியலில் ஈடுபட்ட பெண்களுக்கும் சமூக ஊடகங்களில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. ஆண்களால் தான் இவ்வாறான அவதூறுகள் பரப்ப்படுகின்றது என்று நினைக்க வேண்டாம் பெண்களே பெண்களுக்கு எதிராக பல அவதூறுகைள பரப்புகின்றனர்”. என்றார் கடந்த 07 வருடங்களுக்கு மோலக கொழும்பு மாவட்டத்தில் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் காயத்ரி விக்கிரமசிங்க.

தீபாஞ்சலி அபேவர்தன
“ இதைவிட அரசியல் கட்சிகளுக்குள்ளும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.  ஜனநாயக ரீதியில்  சிந்தித்து பெண்களுக்குரிய வகிபாகங்களை அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இலங்கையைப் பொருத்தவரையில் அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு அனைத்து பிரதேசங்களிலும் சமூக, கலாச்சார பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆண்களுக்கு சொல்ல முடியாத கதைகளை பெண்களுக்கு சொல்லுவார்கள்.  

பெண்களைப் பொருத்தவரையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முங்கொடுத்தே அரசியலில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. ஆண்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற நலன்கள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையில், கலாசார, பொருளாதார, அரசியல் ரீதியில் பல்வேறு வகையான சவால்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர். அரசியலில், பெரும்பாலும் ஆண்களுக்கு செலவு செய்யும் அளவுக்கு பெண்களுக்கு யாரும் செலவழிப்பதில்லை. ஏனெனில் பெண்களை விட ஆண்களே தேர்தலில் வெற்றிபெறுவார்கள் என்ற சிந்தனை சமூகத்தில் காணப்படுகின்றது.” என வெரிட்டே மீடியா ரிசேர்ச்சின் தலைமை அதிகாரி தீபாஞ்சலி அபேவர்தன குறிப்பிட்டார்.

“ பாதிக்கப்படும் பெண்களுக்கு அதாவது பெண் அரசியல்வாதிகளுக்கு உடனடியான நியாயமான தீர்வுகளைக் கூட எமது நாட்டில் உள்ள பொறுப்பான நிறுவனங்கள் வழங்குவதாக தெரியவில்லை. ஆகவே, பெண்கள் அரசியலில் தைரியமாக களமிறங்க யோசிக்கின்றனர். சமூகம் பெண் அரசியல்வாதிகளை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. பெண் அரசியலில் நுழைந்தாலே அவரது நடத்தையை பிழையாக கூறுகின்றது. ஆகவே, நமது நாட்டில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது பயங்கரமான ஒரு செயலாக காணப்படுகின்றது. ஆண்கள், பெண்களை மதிக்க வேண்டும். பெண்களை அடிமைகளாகவே நினைப்பதை நிறுத்த வேண்டும் பெண்களுக்கு சமத்துவத்தை கொடுக்க வேண்டும். சாதாரணமாக ஒரு தாதி, ஆசிரியர், வைத்தியத்துறைகளில் வேவை பார்ப்பது போல அரசியலும் ஒரு சாதாரண துறை என்பதை உணர வேண்டும்.  

56 வீதமான பெண் வாக்காளர்கள் உள்ள இலங்கை நாட்டில் வெறும் 5 வீதமான பெண் அரசியல்வாதிகளே காணப்படுகின்றனர். 56 வீதமான பெண்கள் வாக்காளர்களாக காணப்பட்டாலும் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் அநீதிகளை தட்டிக்கேட்க பெண் அரசியல்வாதிகள் தேவைதானே.  ஒரு ஆண் அரசியல்வாதியிடம் பெண்  தனது அனைத்து பிரச்சினைகளையும் கூற முடியாது. அவ்வாறே பெண்கள் ஆண் அரசியல்வாதிகளிடம் எங்களது பிரச்சினைகளை கூறினாலும் அவர்கள் அதனை பெரிதாக நினைப்பதில்லை.  இதற்காகத் தான் பெண் வேட்பாளர்களாக நாங்கள் களமிறங்குகின்றோம். ஆனாலும் அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் பெண் அரசியல்வாதிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றது. ஆகவே தற்துணிவு உள்ள பெண்கள் தகுதியுடையவர்களாய் இருந்தாலும் கூட அரசியலில் ஈடுபடாமல் இருக்கின்றார்கள்.

அரசியலில் பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு உடனடியாக தீர்வு கொடுத்து தட்டடிக்கொடுக்க சட்டம் இயங்குமானால் சில தற்றுணிவு உள்ள பெண்களுக்கு எதிர்காலத்தில் அரசியலில் களமிறங்க உதவியாக இருக்கும். பெண் அரசியல்வாதிகளும் சாதாரண பெண்கள் தான். அவர்களுடைய சுயமரியாதையை இந்த சமூகம் தாக்குகின்ற போது அவரால் எவ்வாறு அரசியலில் களமிறங்க முடியும் ? எவ்வாறு பெண்களுக்கும் சமூகத்துக்கும் இடையிலான பிரச்சினையை தீர்க்க முடியும் . உரிமைகளை தருவது போல் தந்துவிட்டு முடக்கும் சமுதாயமாக காணப்படுகின்றது.” என்கிறார் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஹலிஸ்ரா டலிமா.

“ இரு வருடங்களுக்கு முதல் இடம்பெற்ற தேர்தலில் எனக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் ஆண் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயல், அத்துடன் நான் மக்கள் மத்தியில் பிரபலமாகி பாராளுமன்றம் சென்றுவிடுவேன் என்ற அச்சம்.

பல பெண்களுக்கு வேட்புமனு கொடுப்பதற்கு கட்சிக்குள் விருப்பமில்லை ஏனென்றால், பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், இலஞ்சம் வாங்க சந்தர்ப்பமில்லை, ஒவ்வொரு விடயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்கள், இதனால் பல பெண் வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 25 வீத கோட்டா இருந்தாலும் அந்த கோட்டாவில் உள்ளீர்க்கப்படும் பெண்கள் ஒரு டம்மியாகவே காணப்படுகின்றனர்.

25 வீத பெண்களை உள்ளடக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் ஆர்வமே இல்லாதவர்களையும், விபரம் இல்லாதவர்களையும் கட்சியில் இருக்கும் ஏனையோரின் மனைவிமாரினதும் உறவினர்களினதும் பெயர்களை பட்டியலுக்குள்  உள்ளீர்க்கின்றார்கள்.  பெண்களை உள்ளீர்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான நிலை இடம்பெறுகின்றது.   இளம் பெண்கள் அரசியலுக்குள் நுழைய சமூகம்  தடுப்பதற்கான காரணமாக தமிழ் சினிமாவும் உள்ளது. ஏனெனில் சினிமாவில்  அரசியல் ஒரு சாக்கடையாக காட்டப்படுகின்றது.” என்கிறார் கடந்த 07 வருடங்களுக்கு மோலக கொழும்பு மாவட்டத்தில் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் காயத்ரி விக்கிரமசிங்க.


“இவ்வாறான சிக்கல்களை தீர்ப்பதற்கு முக்கியமாக அரசியல் கட்சிகளுக்குள் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும், பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னுரிமையளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.  அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிப் பிரச்சாரங்களையும் அவதூறு பேச்சுக்களையும் இல்லாதொழிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும். சமூக ஊடகங்களை கையாளுவோருக்கு இது குறித்த அறிவுகளை வழங்க வேண்டும்.” என்கிறார் வெரிட்டே மீடியா ரிசேர்ச்சின் தலைமை அதிகாரி தீபாஞ்சலி அபேவர்தன.

இதிலிருந்து இலங்கையில் பெண்களின் அரசியலை அல்லது பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னெடுப்பதென்பது மிகச் சிரமமான விடயமாகத் தெரிகிறது. அரசியலில் பெண்களுக்கு ஏற்படும் மேற்குறிப்பிடப்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்து அவர்களின் அரசியலைத் தொடர்வதற்கான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுப்பதற்கான சில செயற்பாடுகளும் நம் நாட்டில் இருந்து வருகின்றன. இவற்றைப் பற்றி அறிந்து இத்தகைய நிறுவனங்களின் துணையை  நாடுவதன் மூலம் நம் நாட்டில் பெண் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் சிரமங்களை ஓரளவேனும் குறைத்துக்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றது. அத்தகைய மிக முக்கியமான சில அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு அமைகின்றன.

சிவசுப்ரமணியம் அச்சுதன்
“ அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களும் அவதூறு கருத்துக்களும் பரப்பப்படும்போது அதனால் பாதிக்கப்படுவோர் தேர்தல் ஆணைக்குழுவில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டுள்ள முறைப்பாட்டுப் பிரிவுக்கோ அவ்லது மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள முறைப்பாட்டுப் பிரிவுக்கோ முறைப்பாடளிக்கமுடியும். முறைப்பாடளிக்கவே தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டு பிரிவு காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட நபர் நேரடியாகவோ, ஈ- மெயில், வட்ஸ்அப்,  மூலமோ அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் (https://www.elections.gov.lk/) மூலமாகவோ, EC- EDR ( https://elections.gov.lk/Pages/edr/mobileapp.html ) என்ற செயலி மூலமாகவோ தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் ” என்கிறார் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன்.

ஆர்.யசிகரன்
“ பெண் அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிராக பரப்பப்படும் போலிப் பிரச்சாரங்கள் மற்றும் அவதூறுகள் தொடர்பில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திலும் (https://www.police.lk/?page_id=1879 ) , சேர்ட் ( https://www.cert.gov.lk/ )  எனும் நிறுவனத்திலும் ( https://stopncii.org/ ) எனும் நிறுவனத்திலும் முறையிடும் போது அவர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவார்கள்.

அத்துடன் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள், போலிச்செய்திகள், போலிப்பிரச்சாரங்களை அடையாளங்கண்டு தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதுடன் அவ்வாறான தகவல் பொய்யானது என்பதை தரவுகளோடு நிரூபிக்கும் செயற்பாட்டை நாம் முன்னெடுக்கின்றோம்” என பத்திரிகை ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் தரவு சரிபார்க்கும் அமைப்பான Factseeker (https://factseeker.lk/) இன்  குழுத் தலைவர் ஆர்.யசிகரன் கூறுகிறார்.
அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களும் அவதூறு கருத்துக்களும் கட்சிக்குள்ளும் வெளியிலும் இணையவெளியிலும், சமூக ஊடகங்களிலும் அவர்களின் முன்னேற்றத்தையும் அரசியிலுக்கு வெளியில் உள்ள பெண்களின் அரசியல் மீதான ஈடுபாட்டுக்கு முட்டுக்கட்டைகளாகவும் கடிவாளங்களாகவும் இருக்கின்றன.

அரசியல் செயல்பாட்டுக்காக பெண்களுக்கு 25 சதவீத கோட்டா வழங்கப்பட்டாலும் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு சுந்திரமானதும் ஜனநாயக ரீதியிலானதுமான பொறிமுறைகள் அமைக்கப்பட வேண்டும். இல்லாது போனால் 25 வீத கோட்டா மாத்திரமே நிரப்பப்படும் அதேவேளை, அரசியலின் மீது ஈர்ப்புள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது கேள்விக் குறியாகவே காணப்படும்.

நன்றி  virakesari
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்