சிக்கன் பிரியாணி..!

5 வைகாசி 2025 திங்கள் 11:02 | பார்வைகள் : 115
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணி என்றால் மிகவும் விரும்புவார்கள். சிக்கனுடன் பிரியாணியில் மசாலாக்கள் சேர்த்து சமைக்கும்போது வரும் நறுமணமே பிரியாணி மீது உள்ள காதலை மேலும் அதிகரிக்கும். காலை, மாலை, இரவு என்று மூன்று நேரத்திற்கும் பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடுபவர்கள் உண்டு. அந்த அளவிற்கு பிரியாணி பிரியர்கள் இருக்கின்றனர் என்றே சொல்லலாம். இதற்கிடையே, பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், நீண்ட நேரம் கிட்சனில் நிற்காமல் எளிதாக சட்டுனு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
எலுமிச்சை - ஒன்று (சாறு பிழியவும்)
புதினா, கொத்தமல்லி - ஒரு கப்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - 8
அன்னாசிப்பூ - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 12
பட்டை - 5 துண்டுகள்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
முதலில், சிக்கனை நன்றாக கழுவி, சுத்தம் செய்ய வேண்டும்.பின்பு, அரிசியை கழுவி சுமார் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பெருஞ்சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி போன்ற பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.குக்கர் சூடானதும் பிரியாணி இலை சேர்த்து, பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்ததாக புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், அரைத்து வைத்த பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.அதில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரிசி சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு குக்கரை மூடி, மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு விடவும்.பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து பிரியாணி எசென்ஸ் சேர்த்து நன்றாக கிளறி 15 நிமிடங்கள் மூடிவைத்து எடுத்துக் கிளறவும்.தற்போது சுவையான சிக்கன் பிரியாணி தயாராக உள்ளது. பரிமாறலாம்..