Paristamil Navigation Paristamil advert login

அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க மெகா கூட்டணி

அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க மெகா கூட்டணி

3 வைகாசி 2025 சனி 12:18 | பார்வைகள் : 206


அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க, மேலும் சில கட்சிகளை இழுத்து, 'மெகா' கூட்டணி அமைக்கும் பழனிசாமியின் திட்டத்தை ஆதரித்து, சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுவது என, கடந்த மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 25ல் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பதை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலை வகித்தார். வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், முனுசாமி, ஜெயகுமார், சீனிவாசன், உதயகுமார், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்:

தி.மு.க.,வை பொது எதிரியாக பாவிக்கும் மனநிலையில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் இருக்கவும், தீயசக்தி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கும், ராஜதந்திரத்தோடு வலுவான தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க., தலைமையில், மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இது, வெற்றிக் கூட்டணியாகத் திகழ, இச்செயற்குழு முழுமனதுடன் ஆதரித்து அங்கீகரிக்கிறது.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, அ.தி.மு.க., தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் துவக்கமாக, பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டு வைத்துள்ளார்.

பொது எதிரியான தி.மு.க.,வை வீழ்த்த, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளை இடம்பெறச் செய்து, 'மெகா' கூட்டணி அமைப்பதற்கு, பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். அவருக்கு செயற்குழு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., -- பா.ஜ., -- த.மா.கா., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் வந்து விடும் என உறுதியாக நம்பும் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி அல்லது த.வெ.க.,வை கூட்டணிக்குள் இழுத்துவர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

சீமானிடம், பா.ஜ., தலைமையும் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பில் தான், மெகா கூட்டணி அமைப்போம் என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

'மத்திய அரசுக்கு துணை நிற்போம்'

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளான கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டிக்கிறோம் 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்ததற்காக, மாணவர்களிடமும், தமிழக மக்களிடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் தி.மு.க., அரசு மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழிக்கொள்கை, கல்விக்கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என, தி.மு.க., அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள், துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாகப் பேசிய பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்ட பழனிசாமியை பாராட்டுகிறோம் கொலை, கொள்ளை, போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை என, தொடர் சமூக விரோத செயல்களால், தமிழகத்திற்கு தி.மு.க., அரசு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது சுய விளம்பர ஆட்சியும், 'போட்டோ ஷூட்' காட்சியும் நடத்தி வரும் தி.மு.க., அரசை கண்டிக்கிறோம் காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். பயங்கரவாத செயல்களை ஒடுக்க, மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க., துணை நிற்கும்.இவை உள்ளிட்ட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்