இந்தியாவும், பாகிஸ்தானும் பாதுகாப்பை பேணுங்கள்: அமெரிக்கா, ஐ.நா., வலியுறுத்தல்

1 வைகாசி 2025 வியாழன் 08:03 | பார்வைகள் : 130
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்'' என ஐ.நா., வலியுறுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்களை அதிகரிக்க வழிவகுத்தது. அதன் பின்னர், இரு நாடுகளும் வர்த்தகத்தையும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் சிம்லா ஒப்பந்தம் போன்ற பல ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளன.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ''இந்தியாவும், பாகிஸ்தானும் பதட்டங்களைத் தணிக்க வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார். இரு நாடுகளும் பதட்டங்களைத் தணிக்க வலியுறுத்தினார்.
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மார்கோ ரூபியோ தனது வருத்தத்தை தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்க அமெரிக்காவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினார். விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பாகிஸ்தானை ரூபியோ கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பேச்சு
இதற்கிடையே, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கவலை தெரிவித்த அன்டோனியோ குட்டெரெஸ், ''எந்தவொரு மோதலும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்' என்று எச்சரித்தார்.