ஒரு வாரம் முன்பே பருவமழை கொட்டுகிறது!

25 வைகாசி 2025 ஞாயிறு 11:51 | பார்வைகள் : 318
ஒரு வாரத்துக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை நேற்று துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின், கேரளாவில் பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளதால், அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
நம் நாட்டின் விவசாயத்துக்கு தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வாயிலாகவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிக மழைபொழிவு கிடைக்கிறது. இந்த பருவ மழையால், மக்கள் தொகையில், 42.3 சதவீதம் பேர் பயனடைகின்றனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 18.2 சதவீத பங்களிப்பை இந்த பருவமழை வழங்குகிறது. அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டவும், குடிநீர் மற்றும் மின் பயன்பாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தென்மேற்கு பருவமழை உதவுகிறது.
வழக்கமாக, ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இம்முறை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே, நேற்று பருவ மழை துவங்கி உள்ளது.
கடைசியாக, 2009 மே 23ல், கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியது. தற்போது, 16 ஆண்டுகளுக்கு பின், பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக நேற்று துவங்கியது. வழக்கமாக, ஜூன் 1-ல் பருவமழை துவங்கும். இந்த முறை, எட்டு நாட்களுக்கு முன்பாகவே துவங்கி உள்ளது. கேரளா முழுதும் வரும் நாட்களில் பலத்த மழை பெய்யும். மழை நாட்கள் குறைவாக இருந்தாலும், மழைபொழிவு கூடுதலாக இருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில், கோழிக்கோடு, இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைபெய்தது.
இதனால், சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன; மின்கம்பங்களும் சாய்ந்தன. இரவு முழுதும் கொட்டி தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்தது.
முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும்பாதிக்கப்பட்டது.
5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
கேரளாவின் காசர்கோடு, கண்ணுார், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, கனமழைக்கான 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.காசர்கோடு, கண்ணுார், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய 11 மாவட்டங்களுக்கு, நாளை அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.