டாஸ்மாக் ஊழலில் முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஈ.டி.,

24 வைகாசி 2025 சனி 14:49 | பார்வைகள் : 102
டாஸ்மாக் ஊழலில் பெறப்பட்ட லஞ்ச பணம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்ட மற்றும் டாஸ்மாக் கணினியில் சரக்கு கையிருப்பு தொடர்பான தரவுகள் திருத்தப்பட்டது குறித்து கிடைத்துள்ள தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. டாஸ்மாக் தலைமையகம் மற்றும் அதன் நிர்வாக இயுக்குனர் வீடு உட்பட பல முக்கிய இடங்களில் சோதனைகள் நடந்தன.
அப்போது, நிர்வாக இயக்குனரின் வாட்ஸாப் தகவல் பரிமாற்றங்களின் பிரதிகளை, அமலாக்கத்துறை சாலையில் கண்டெடுத்தன.
இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணை மற்றும் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விசாரணை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதன் விபரம்:
டாஸ்மாக் ஊழலில் கிடைத்த லஞ்ச பணம் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளோம்.
மேலும், டாஸ்மாக்கில் உள்ள கணினியில் உள்ள சரக்கு கையிருப்பு தகவல்கள் முறைகேடாக திருத்தப்பட்டுள்ளன. சில மதுபான அதிபர்களின் லாபத்துக்காக அந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவிலான ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை நடக்கும்போது அவற்றை சமர்ப்பிக்க உள்ளோம்.
இந்த பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட சில முக்கிய நபர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய உள்ளோம். டாஸ்மாக் நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கும் சில இடைத்தரகர்களுக்கும் நடந்த தகவல் பரிமாற்றங்கள் சிக்கியுள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தொடரும். இவ்வாறு அவர் கூறினர்.