OQTF சட்டம் : நாள் ஒன்றுக்கு €100 யூரோக்கள் செலுத்த வேண்டும்.. அதிரவைக்கும் புதிய அறிவிப்பு!!

23 வைகாசி 2025 வெள்ளி 18:17 | பார்வைகள் : 1428
நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்டவர்கள், நாள் ஒன்றுக்கு €100 யூரோக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனும் ஒரு அதிர்ச்சியூட்டும் ஆலோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
OQTF (obligations de quitter le territoire français) என்பது, பிரான்சில் இருந்து 30 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் எனும் சட்டமாகும். பிரான்சில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், ஆபத்தானவர்கள் என கருதப்படுபவர்களுக்கு இந்த OQTF அறிவித்தல் வழங்கப்படும். ஆனால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து நாட்டுக்குள்ளேயே வசிக்கின்றனர். அதில் சிலர் குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
அவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால், அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு €100 யூரோக்கள் பணம் செலுத்த வேண்டும் எனும் நடவடிக்கை ஒன்றை கொண்டுவரவேண்டும் என RN கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Emeric Salmon தெரிவித்துள்ளார்.
“இதன் நோக்கம் அவர்களை வைத்து காசு சம்பாதிப்பது இல்லை. மாறாக அவர்களது செலவிலேயே விரைவாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை ஊக்குவிக்க அதனை செயற்படுத்த வேண்டும் என்பதே ஆகும்” என Emeric Salmon மேலும் தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டில் பிரான்சில் 39,083 பேருக்கு OQTF விநியோகிக்கப்பட்டிருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டில் 137,730 பேராக அது உயர்ந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.