இணையம், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி துண்டிப்பு: 10,000 வீடுகள் மற்றும் வணிகங்கள் பாதிப்பு!

23 வைகாசி 2025 வெள்ளி 17:29 | பார்வைகள் : 3073
மே 23ஆம் திகதி இரவு நேரத்தில் Oise மாவட்டத்தில் உள்ள ஜோன்கியர் (Jonquières) மற்றும் கிலோகூர் (Gilocourt) நகரங்களில் சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களால் பெரும்பாலும் ஓய்ஸ் பகுதியைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜோன்கியரில் கம்பிகள் சேதமடைந்துள்ளன; கிலோகூரில் கொப்பர் கம்பிகள் திருடப்பட்டுள்ளன. இந்த இரண்டு சம்பவங்களும் தொடர்பற்றவை என Orange நிறுவனம் தெரிவித்துள்ளது. Crépy-en-Valois மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Orange குழுவினர் சேவைகளை மீட்டமைக்க பணியாற்றி வருகின்றனர். காலை 11:45 மணிக்குள் சேவை சீரடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஓய்ஸ் மாவட்டம் தொடர்ந்து கம்பி திருட்டுகளால் பாதிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் பல கிலோமீட்டர் ADSL கம்பிகள் திருடப்பட்டு, வனப்பகுதிகளில் எரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கொப்பர் விலைகள் உயர்ந்ததால் இது பெரிதும் அதிகரித்துள்ளது.
இது அந்த பகுதியில் மீண்டும் மீண்டும் இணைய சேவையில் தடைகளை ஏற்படுத்துகிறது. 2024ஆம் ஆண்டில் இதுபோன்ற 10 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.