கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 3 பெண்கள் - அதிகாரிகள் அதிர்ச்சி

20 வைகாசி 2025 செவ்வாய் 10:08 | பார்வைகள் : 279
சுமார் 12 கோடி மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை மின் உபகரணங்களுக்குள் மறைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து ரெட் சேனல் வழியாக வெளியேற முயன்ற மூன்று பெண்கள் திங்கட்கிழமை (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய தாயும் அவரது 18 வயதுடைய மகளும், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்த 12 கிலோகிராம் போதைப்பொருளை தாய்லாந்தில் வாங்கி, 07 மின் உபகரணங்களுக்குள் மிக சூட்சுமமான முறையில் மறைத்துக்கொண்டு, இந்தியாவின் சென்னைக்கு வந்து அங்கிருந்து திங்கட்கிழமை(19) மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த மூன்று பெண்களும் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு மின் உபகரணங்கள் கொண்டு வந்திருப்பது கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கேமரா அமைப்பை கண்காணித்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.