தென்மாவட்டம், கொங்கு மண்டலத்தில் போட்டி திருமாவளவனுக்கு மா.செ.,க்கள் அழுத்தம்

20 வைகாசி 2025 செவ்வாய் 11:15 | பார்வைகள் : 241
தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் வி.சி., போட்டியிட, தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும்' என, திருமாவளவனுக்கு அக்கட்சி மாவட்டச்செயலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வி.சி., போட்டியிடும் என, அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
இதற்கு, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் அதிருப்தி தெரிவித்தாலும், பா.ஜ.,வை வீழ்த்த, தி.மு.க., கூட்டணியில் நீடிப்பது அவசியம் என, திருமாவளவன், அவர்களை சமாதானப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கட்சியை பலப்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் திருமாவளவன் சுற்றுப்பயணம் செய்து, மாநில, மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது, தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுவது உறுதி என்றாலும், இம்முறை அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என, திருமாவளவனுக்கு மாவட்டச்செயலர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:
வி.சி., கட்சி ஆரம்பித்தபோதே, கூட்டணியில் 10 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது இருந்ததை விட, தற்போது கட்சி பல்வேறு ஊர்களில் வலுவாக கட்டமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.,க்கு ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டன; நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
தற்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதுடன், பானை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது. இதனால், பானை சின்னத்தை மக்களிடம் எடுத்து செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
எனவே, 2026 சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., கூட்டணியில் கேட்டு பெற வேண்டும். அதில், நான்கு பொதுத்தொகுதிகளாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என, திருமாவளவனிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அதற்கு, எந்தந்த பகுதிகளில் கட்சி வலுவாக உள்ளது; வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை திருமாவளவன் கேட்டுள்ளார். வரும் தேர்தலில், கடந்த தேர்தலை விட அதிகமான தொகுதிகளில் வி.சி., போட்டியிட்டு வெற்றி பெறும். அதற்கான ஏற்பாடுகளில் தற்போது கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.