Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சமூக ஊடக பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் சமூக ஊடக பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

20 வைகாசி 2025 செவ்வாய் 07:31 | பார்வைகள் : 184


நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கவலை வௌியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதி அமைப்புக்கும் தீங்கு விளைவிக்கும் சில கருத்துகள் மற்றும் பதிவுகளை சில சமூக ஊடக தளங்களில் பொதுமக்கள் பதிவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

நீதி நிர்வாகத்தில் நீதித்துறை அதிகாரிகள் வகிக்கும் முக்கிய பங்கையும், நீதித்துறையின் கடமைகள், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிசெய்தல் மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு, நீதித்துறை நடத்தையை மறுபரிசீலனை செய்வதற்காக சட்டம் தெளிவான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது.

சில நபர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் நீதித்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும், எந்த உண்மைத்தன்மையும் அடிப்படை ஆதாரங்களும் இன்றி சில விடயங்களை தெரிவித்துள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் மற்றும் உட்பட்ட விடயங்களைப் பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்கள் நீதித்துறை அமைப்புக்கும் செயல்முறைக்கும் நெறிமுறையற்றவை என்றும், இதனூடாக நீதிமன்ற நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சூழல் உருவாகும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு அறிக்கைகள் அல்லது கருத்துகளை வெளியிடும்போது, ​​விசாரணை செயன்முறைக்கு பாதகமான அல்லது தேவையற்ற பொது அழுத்தத்திற்கு வழிவகுக்கும் வகையிலான எந்தவொரு நடத்தையிலிருந்தும் பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீதித்துறை அதிகாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் சட்டங்களால் அனுமதிக்கப்படும் போது தவிர, பொது குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்கமாகவோ அல்லது வேறு விதமாகவோ பதிலளிக்க முடியாது.

எனவே, மேற்கூறியவற்றைக் கருத்திற்கொண்டு, நீதித்துறை அதிகாரிகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது பொறுப்பான கலந்துரையாடல், உரிய செயல்முறைக்கு மரியாதை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதி செய்வது அவசியம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்