தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர் பட்டாளம் - முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து

18 வைகாசி 2025 ஞாயிறு 15:49 | பார்வைகள் : 116
எம்.எஸ்.தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர் பட்டாளம் இருப்பதாகவும், பிற வீரர்கள் பணம் கொடுத்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் ஹர்பஜன் சிங் கூறியது சர்ச்சையாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் தோனி, ஐசிசியின் ஒருநாள், டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கிண்ணங்களை வென்றுகொடுத்த ஒரே கேப்டன் ஆவார்.
அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஐந்து முறை கிண்ணங்களை வென்று கொடுத்ததால் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதேபோல் கோஹ்லிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் தோனியைக் காட்டிலும் கோஹ்லி அதிக ரசிகர்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடந்த குழு விவாதத்தில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.
அவர் கூறுகையில், "தோனியால் முடிந்தவரை விளையாட முடியும். அது எனது அணியாக இருந்திருந்தால், நான் வேறு முடிவை எடுத்திருப்பேன். ரசிகர்கள் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவருக்கு உண்மையான ரசிகர் பட்டாளம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
மீதமுள்ள அனைவருக்கும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் உள்ளனர், அவர்கள் கூட பணம் பெரும் ரசிகர்கள்தான். அவர்களை விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாம் அதைப் பற்றி விவாதிக்க ஆர்மபித்தால், விவாதம் வேறு திசையில் செல்லும்" என தெரிவித்தார்.