பாக்., பயங்கரவாத ஆதரவை உலக அரங்கில் பகிரங்கப்படுத்த ஏழு குழுக்கள்: மத்திய அரசு அதிரடி

18 வைகாசி 2025 ஞாயிறு 10:52 | பார்வைகள் : 188
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்த பட்டியலில் இல்லாத, மூத்த எம்.பி., சசி தரூரின் பெயரை மத்திய அரசு சேர்த்து இருப்பது, காங்கிரசை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவம் கடுமையான தாக்குதலை தொடுத்தது.
விமர்சனம்
இந்தத் தாக்குதல் காரணமாக, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை, சர்வதேச நாடுகள் மத்தியில் பல்வேறு கருத்துகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை மேற்கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்தும், நம் நிலைப்பாடு என்ன என்பதை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கு, எம்.பி.,க்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், துாதர்கள் அடங்கிய ஏழு அனைத்து கட்சி குழுக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் மாத கடைசியில் பயணத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஏழு குழுக்களை தலைமை தாங்கி வழிநடத்தவும், அதில் இடம் பெற உள்ள எம்.பி.,க்கள் பெயர்களை பரிந்துரைக்க வும் முக்கிய கட்சிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
குறிப்பாக, நேற்று முன்தினம், காங்கிரஸ் மூத்த எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலை, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தொடர்பு கொண்டு பேசினார்.
காங்கிரஸ் சார்பில் தலைமையேற்று நடத்திச் செல்ல இருப்பவரின் பெயரை பரிந்துரைக்கும்படி கேட்கப்பட்டது. அன்று மதியமே, ராகுல் தரப்பில் இருந்து நான்கு பெயர்கள் அடங்கிய பட்டியல் அனுப்பப்பட்டது.
அந்தப் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, தற்போதைய லோக்சபா காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், ராஜ்யசபா எம்.பி., சையது நசீர் உசேன், லோக்சபா எம்.பி., ராஜா பிரார் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
நேற்று காலையில் இந்த தகவலை, காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டு, அரசின் சார்பில் தகவல் கேட்கப்பட்டதையும், அதற்கு தாங்கள் இந்த பெயர்களை அளித்திருப்பதையும் உறுதி செய்தார்.
வலுவான செய்தி
இந்நிலையில் தான், அடுத்த சில மணி நேரங்களில் மத்திய அரசின் சார்பில், வெளிநாடுகளுக்கு செல்லும் குழுக்களுக்கு தலைமை வகிப்போர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய இந்த குழு, நம் நாட்டின் தேசிய கருத்தொற்றுமை மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான, நம் உறுதியான, பலம் வாய்ந்த அணுகுமுறையை விளக்கும்.
மேலும், பயங்கரவாதத்தை துளியும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதற்கு சிறு அளவு கூட எங்களிடம் இடம் இல்லை என்ற வலுவான செய்தியை, உலக நாடுகளுக்கு இந்தக் குழுக்கள் கொண்டு செல்லும். பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பி.,க்களும் இந்தக் குழுக்களில் இடம் பெறுவர்.
அதன்படி பா.ஜ., சார்பில் ரவிசங்கர் பிரசாத், பைஜயந்த் பாண்டா, கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா,சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நான்கு குழுக்களை தலைமையேற்று நடத்துவர். காங்கிரசின் சசிதரூர், தி.மு.க.,வின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் பிரிவின் சுப்ரியா சுலே ஆகியோர் மற்ற மூன்று குழுக்களை வழிநடத்துவர்.
இவ்வாறு, இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானதும், காங்கிரஸ் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து யாரையும் சேர்க்காமல், திருவனந்தபுரம் எம்.பி., யும் மூத்த தலைவருமான சசி தரூரை, சர்வதேச குழுவில் இடம்பெற செய்திருப்பது, அக்கட்சியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்தபோதிலும், மற்ற தலைவர்களை போல, சோனியா குடும்பத்திற்கு விசுவாசமிக்கவராக, தன்னை காட்டிக் கொள்ளாதவராகவே சசி தரூர் இருந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு நடந்த தலைவர் தேர்தலில்,சோனியாவால் நிறுத்தப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து, சசி தரூர் தைரியமாக போட்டியிட்டார்.
அதேபோல, சமீபத்தில் கேரளாவில் நடந்த, விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியோடு சேர்ந்து, ஒரே மேடையில் பங்கேற்றார்.
இது தவிர, பாகிஸ்தான் மீதான சமீபத்திய ராணுவ நடவடிக்கையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, மத்திய அரசின் நடவடிக்கைகளை வரவேற்றும், பிரதமரையும் புகழ்ந்து பேசியிருந்தார்.
இதுமட்டுமல்லாது, கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் யாருடனும் இணக்கமாக செல்லாமல் இருப்பவர். மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும், காங்கிரசுக்குள் தனி ஆவர்த்தனம் பாடக் கூடியவராகவே இருந்து வருகிறவர். கடந்த தேர்தல் முடிந்ததும், லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் பதவியை எதிர்பார்த்தவர். அதற்கு முன்பும்கூட, லோக்சபா காங்., தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
இத்தகைய பின்னணியில் தான், ராகுல் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நான்கு பெயர்களில் இவர் பெயர் இல்லை. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்களில் ஒருவரையும் ஏற்றுக்கொள்ளாமல், மத்திய அரசு தாங்களாகவே முடிவுசெய்து, காங்கிரசுக்குள் இருக்கும் அதிருப்தி எம்.பி.,யான சசிதரூரின் பெயரை இணைத்து, ஒரு சர்வதேச குழுவுக்கு, அவர் தலைமையேற்று செல்வார் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ், கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்த போதிலும், தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக, சசி தரூர் அறிவித்திருப்பது, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில், பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேர்மையற்ற செயல்!
மத்திய அரசின் அறிவிப்பு, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது, மத்திய அரசின் நேர்மையற்ற செயல். காங்கிரசில் இருப்பதற்கும், காங்கிரஸ்காரராக இருப்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்கிரஸ்
சேவைக்கு தயார்!
நம் நாட்டின் கருத்துகளை, உலக நாடுகளுக்கு விளக்கிச் சொல்ல, ஒரு குழுவை வழிநடத்திச் செல்ல, அரசு எனக்கு விடுத்திருக்கும் அழைப்பானது கவுரவம் அளிக்கிறது. தேசிய நலன் சார்ந்து என் சேவை தேவைப்படும் என்றால், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்.
சசி தரூர், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்