பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சம் எது? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்

16 வைகாசி 2025 வெள்ளி 09:17 | பார்வைகள் : 102
டெல்லியில் ஹோண்டுராஸ் நாட்டின் தூதரக திறப்பு விழா இன்று நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, நமக்கு உற்ற துணையாக நின்ற நாடுகளில் ஹோண்டுராஸ் நாடும் ஒன்று என்றார்.
பாகிஸ்தானுடனான நம்முடைய உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது நிச்சயம் இருதரப்பு என்ற அளவிலேயே இருக்கும். அது பல ஆண்டுகளுக்கான தேசிய கருத்தொருமித்த விசயங்களில் ஒன்று. அதில், முற்றிலும் வேறெந்த மாற்றமும் இல்லை.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்றால் அது, பயங்கரவாதம் ஒன்று மட்டுமே என பிரதமர் மிக தெளிவாக கூறி விட்டார். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பலர் அடங்கிய ஒரு பட்டியலே பாகிஸ்தானிடம் உள்ளது.
அவர்கள் பயங்கரவாத கட்டமைப்புகளை மூட வேண்டிய தேவையும் உள்ளது. என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும். பயங்கரவாத விசயத்தில், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களிடம் விவாதிக்க நாங்கள் தயார்படுத்தி வைத்திருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தைகளே, அடுத்து மேற்கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும் என அவர் கூறியுள்ளார்.