பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் தனி நாடாக பிரகடனம்

15 வைகாசி 2025 வியாழன் 13:24 | பார்வைகள் : 1031
பாகிஸ்தானில் உள்ள பெரிய மாகாணமான பலூசிஸ்தான் தங்களை தனி நாடாக பிரகடனம் செய்துள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் ஆகும்.
பல ஆண்டுகளாகவே, பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, பலுச் விடுதலைப் படையினர்(BLA) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை பாகிஸ்தான் அரசு ராணுவம் மூலம் ஒடுக்கி வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில், பாகிஸ்தான் மீதான தாக்குதலை BLA அமைப்பு தீவிரப்படுத்தி வருகிறது. பல அரசு அலுவலகங்களை கைப்பற்றியுள்ள அவர்கள், அங்கிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றி விட்டு, பலூசிஸ்தான் கொடியை ஏற்றி உள்ளனர்.
சமீபத்தில் இந்திய ராணுவம், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்டு வந்த சூழலில், BLA பாகிஸ்தான் ராணுவத்துடன் கடும் மோதலில் ஈடுபட்டு வந்தது. மேலும், ஆபரேஷன் சிந்தூருக்கு பலுச் விடுதலை அமைப்பு முழு ஆதரவையும் வழங்கி வந்தது.
தற்போது தங்களை பலுசிஸ்தானை தனி நாடாக பிரகடனம் செய்வதாக BLA அமைப்பின் தலைவர் மிர் யார் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இந்தியாவிற்கு பாகிஸ்தானை தோற்கடிக்கும் வல்லமை உண்டு.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மனித கேடயங்களாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதால், அங்கு ரத்த ஆறு ஓடினால் அதற்கு பாகிஸ்தான்ராணுவ தளபதிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் என்றும் தாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இதே போல், டெல்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தை அமைக்க அனுமதி வேண்டும் எனவும், ஐநாவும் தங்களை தனி நாடாக அங்கீகரித்து, புதிய நாட்டுக்கான பண நோட்டுகள் மற்றும் பாஸ்போர்ட்களை உருவாக்க தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானின் நிலப்பரப்பில் 44% உள்ள பலூசிஸ்தான் மாகாணம் இவ்வாறு அறிவித்திருப்பது, பாகிஸ்தான் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.