மியன்மார் பாடசாலை மீது வான்வழித் தாக்குதல் - 22 மாணவர்கள் 02 ஆசிரியர்கள் பலி

15 வைகாசி 2025 வியாழன் 06:52 | பார்வைகள் : 235
மியன்மார் நாட்டின் சகாயிங் பகுதியின் ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள பாடசாலையொன்றின் மீது நேற்று முன்தினம் காலையில் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 22 மாணவர்களும் 02 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் இந்த தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தப் பகுதி இராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்படக்கூடியதொன்றாகும்.
ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு தீவிரமான சண்டை எதுவும் இல்லை. எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் இத்தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ளது.
இத்தாக்குதலை மியன்மார் இராணுவம் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகின்ற போதிலும் அதனை அரச ஊடகங்கள் மறுத்துள்ளதோடு எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், நேரில் கண்ட சாட்சிகளும் சுயாதீன ஊடக அறிக்கைகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
சாகைங் பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. அதில் பிள்ளைகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தெரிந்ததே.