பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்

12 வைகாசி 2025 திங்கள் 16:45 | பார்வைகள் : 164
பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள் அனைத்தையும், நமது உள்நாட்டு தயாரிப்பு நவீன ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று ராணுவ தளபதிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று (மே.12) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை, மாலை 5 மணிக்கு மேல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முப்படை தளபதிகள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
ராணுவ நடவடிக்கைக்கான தலைமை தளபதி (டி.ஜி.எம்.ஓ.,) ராஜிவ் கய் கூறியதாவது:
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்தது பரிதாபத்திற்கு உரியது. அதனால் தான் நாங்கள் தக்க பதிலடி கொடுப்பது என்று முடிவு எடுத்தோம். கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல் முறை வெகுவாக மாறியிருக்கிறது.
இவ்வாறு ராஜிவ் கய் கூறினார்.
ஏர் மார்ஷல் பாரதி கூறியதாவது:பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் ராணுவம் மீது நாங்கள் தாக்குதல் நடத்த வில்லை. பயங்கரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தங்களுடைய பிரச்னையாக மாற்றியுள்ளது.
நமது வான்வழி அமைப்பு பாதுகாப்பானது சுவர் போன்றது. அவற்றை அகற்றுவது எளிதானது அல்ல.பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு, பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று. பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் அழித்துவிட்டோம்.
நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தி அனைத்து ட்ரோன்களையும் அழித்தோம்.
மத்திய அரசின் துணையால் நாங்கள் வலிமை பெற்றோம். மத்திய அரசு நிதி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எங்களுக்கு துணை நின்றது நாங்கள் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
எந்த நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும் அதை அழிக்கும் வண்ணம் நமது நவீன தொழில்நுட்ப திறன் உள்ளது.பாகிஸ்தான் ஏவிய சீனாவின் அதிநவீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
வான் தாக்குதலில் நமக்கு சிறிய அளவு பாதிப்பு; பாகிஸ்தானுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.ரஹீம்யார் கான் விமானப்படை தளத்தில் இந்தியா நடத்திய
தாக்குதலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
வைஸ் அட்மிரல் பிரமோத் கூறியதாவது:
இரவு, பகல் பாராமல் கடற்படை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து தளங்களில் இருந்து வரும் தாக்குதல்களையும் முறியடித்துள்ளோம். எதிரிபடைகளை தாக்கி நமது படை வல்லமையை நிலைநிறுத்தி உள்ளோம்.
முப்படைகள் அணி வகுத்து ஒருங்கிணைப்பு இருந்ததால், எதிரி படைகள் நம் அருகில் நெருங்கக்கூட முடியவில்லை. பாகிஸ்தான் ஏவிய அனைத்து ட்ரோன்களும் அழிக்கப்பட்டன.எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையும், சர்வதேச எல்லையையும் தாண்டாமல் இந்தியா தாக்குதலை நடத்தியது
பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு முப்படை தளபதிகள் கூறினர்.